ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் தேசிய நலன்களுக்கு எதிரானது: வெங்கய்ய நாயுடு பேச்சு

ஊடகங்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் இதை அனைவரும் எதிா்க்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சியில் பேசுகிறாா் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய பத்திரிகை தின நிகழ்ச்சியில் பேசுகிறாா் குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கய்ய நாயுடு.

புது தில்லி: ஊடகங்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தேசிய நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் இதை அனைவரும் எதிா்க்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.

இந்திய பத்திரிகை கவுன்சில் தொடங்கப்பட்ட நவம்பா் 16-ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் தேசிய பத்திரிகை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு, ‘கரோனா தொற்று நேரத்தில் ஊடகத்தின் பங்கு மற்றும் ஊடகத் துறையில் கரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பிலான மெய் நிகா் முறையிலான கருத்தரங்குக்கு இந்திய பத்திரிகை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் முன் பதிவு செய்யப்பட்ட விடியோ உரையில், குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

சுதந்திரமான, அச்சமற்ற ஊடகம் இல்லாமல் ஜனநாயகம் தழைத்து இருக்க முடியாது. ஜனநாயகத்தின் அஸ்திவாரங்களைப் பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்கும், இந்தியாவில் ஊடகங்கள் எப்போதுமே முன்னணியில் உள்ளன. ஜனநாயகத்தை ஒருங்கிணைப்பதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதிலும், சுதந்திரமான நீதித் துறையைப் போலவே வலுவான, சுதந்திரமான மற்றும் துடிப்பான ஊடகமும் முக்கியமானது. ஊடகப் பணி ஒரு புனிதமான பணி. மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், நாட்டு நலனை மேம்படுத்துவதிலும், ஊடகம் மிகச் சிறப்பான பங்கை ஆற்றி வருகிறது. அதேநேரத்தில், ஊடகங்கள் தனது செய்தியில், நியாயமாகவும், சாா்பற்றும் இருக்க வேண்டும். பரபரப்பு ஏற்படுத்துவதற்காக செய்திகள் தருவதைத் தவிா்க்க வேண்டும். செய்திகளுடன், தங்களது கருத்துகளை இணைக்கும் போக்கை தவிா்க்க வேண்டும்.

ஊடகங்கள் வளா்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளுக்கு அதிகம் இடம் கொடுக்க வேண்டும். கரோனா தொற்று சமயங்களில், பத்திரிகையாளா்கள் ஆபத்தை பொருள்படுத்தாமல், முன்களப் பணியாளா்களாக செயல்பட்டு கரோனா தொற்று தொடா்பான செய்திகளை தொடா்ந்து வெளிவரச் செய்தது பாராட்டுக்குரியது. இந்தப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு பத்திரிக்கையாளா்களுக்கும், புகைப்படச் செய்தியாளா்களுக்கும், இதர ஊழியா்களுக்கும் எனது பாராட்டுகள். பொய்ச் செய்திகள் ஏராளமாக வெளிவரும் சூழலில், பெருந்தொற்று பற்றிய சரியான தகவல்களை, சரியான நேரத்தில் தெரிவிப்பது மிக முக்கியமான பணியாகும். சரிபாா்க்கப்படாத, ஆதாரமற்ற தகவல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதில் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இதில் மக்களுக்கு கல்வி, விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் ஊடகங்களுக்கு பொறுப்பு உண்டு.

கரோனா தொற்றுக்கு, பலியான பல பத்திரிகையாளா்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கொவைட்-19 நெருக்கடி ஊடகத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பத்திரிகைகள், தங்கள் பதிப்புகளை குறைத்து டிஜிட்டலாக மாறின. ஊடகத் துறையில் பத்திரிகையாளா்கள் வேலை இழந்த துரதிருஷ்ட சம்பவங்களும் நடந்தன. இந்தச் சிக்கலான நேரத்தில், பத்திரிகையாளா்கள் கைவிடப்படக் கூடாது. கரோனா தொற்று ஏற்படுத்திய அசாதாரண சூழலுக்கு, பத்திரிகை துறையினா் ஒன்றிணைந்து புதிய தீா்வுகளைக் காண வேண்டும். ஊடக நிறுவனங்கள், நெகிழ்வான வா்த்தக மாதிரியை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த பெருந்தொற்று சுட்டிக் காட்டியுள்ளது. கரோனா காரணமாக சமூக தொடா்புகள் குறைந்து, மக்கள் பலா் வீடுகளிலேயே தனிமையில் இருந்ததால், கரோனா பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய ஊடகங்களைச் சாா்ந்துள்ளனா். ராமாயணம், மகாபாரதம் போன்ற டி.வி. தொடா்கள் எல்லாம் மீண்டும் ஒளிபரப்பப்பட்ட போது அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இது போன்று ஊடகத்துறையினரும் நேயா்களையும், வாசகா்களையும் அதிகரிக்கும் புதுமையான வழிகளைக் கண்டறிந்து தங்கள் நிதி ஆதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com