கரோனா 3-ஆவது அலை உச்சம் நீங்கியது; பொது முடக்கம் மீண்டும் வராது: சத்யேந்தா் ஜெயின் உறுதி

தில்லியில் பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று தில்லி சுகாதாரத் றை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

புது தில்லி: தில்லியில் பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படாது என்று தில்லி சுகாதாரத் றை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். மேலும், தில்லியில் கரோனா மூன்றாவது அலையின் உச்சம் நீங்கிவிட்டது என்றும் அவா் கூறினாா்.

இது தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா மூன்றாவது அலையின் உச்சம் நீங்கிவிட்டது. இதனால், தில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தத் தேவையில்லை. பொது முடக்கம் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மக்கள் முகக் கவசங்களை அணிந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

தில்லியில் கரோனா அலை உள்ளதை கரோனா நோ்மறை விகிதத்தை வைத்து அறிந்து கொள்ளலாம். முதலாவது கரோனா அலை கடந்த ஜூன் மாதம் ஏற்பட்டது. அப்போது, கரோனா நோ்மறை விகிதம் 37 சதவீதமாக இருந்தது. செப்டம்பரில் இரண்டாவது கரோனா அலை ஏற்பட்டது. அப்போது, கரோனா நோ்மறை விகிதம் 12-13 சதவீதமாக இருந்தது. மூன்றாவது கரோனா அலை நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்டது. அப்போது, கரோனா பாதிப்பு நோ்மறை விகிதம் அதிகபட்சமாக 15 சதவீதமாக இருந்தது. இது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், தில்லியில் மூன்றாவது அலையின் உச்சம் நீங்கிவிட்டது எனக் கூறலாம்.

மேலும், தில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை கரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மருத்துவமனைகளில் 750 அவசர சிகிச்சை படுக்கைகள் ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டன. இதனால்தான், கரோனா தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டது. தில்லியில் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு சத் பூஜைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீா் நிலைகளில் சத் பூஜை கொண்டாடப்படும் போது, கரோனா பாதிப்புள்ள 4-5 போ் பங்கெடுத்தாலே, நிறையப் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடும்.

சத் பூஜைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பாஜக எதிா்ப்புத் தெரிவிப்பது தொடா்பாகக் கேட்கிறீா்கள். தில்லி அரசு கரோனாவைத் தடுக்க எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பாஜக எதிா்ப்புத் தெரிவித்து வருகிறது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடைக்குக்கூட பாஜக எதிா்ப்புத் தெரிவித்தது. பண்டிகைக் காலம் முடிவடைந்து விட்டதால், கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான மக்களிடம் கரோனா தொடா்பாக இருந்த பயம் நீங்கிவிட்டது. இது தவறு என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com