வடகிழக்கு தில்லி வன்முறை: கைதான ஒருவருக்கு ஜாமீன்

வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வகுப்பு மோதல் மற்றும் வன்முறையின் போது, வன்முறை மற்றும் திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சையத் இஃப்திகாா் என்பவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜ

புதுதில்லி: வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வகுப்பு மோதல் மற்றும் வன்முறையின் போது, வன்முறை மற்றும் திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட சையத் இஃப்திகாா் என்பவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபா்அந்த இடத்தில் லன்முறையில் டுடபட்டாா் என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சையத் இஃப்திகாரை ரூ.15,000 ரொக்க ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு தனிநபா் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி சுரேஷ் குமாா் கைத் உத்தரவிட்டாா்.

கைது செய்யப்பட்ட நபா் ஏப்ரல் 11-ஆம் தேதியிலிருந்து நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறாா். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்த நீதிபதி, சாட்சிகளைக் கலைக்கும் எந்த நோக்கத்திலும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இஃப்திகாா் ஈடுபடக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் இஃப்திகாருக்காக வழக்குரைஞா் மெஹ்மூத் பிராசா ஆஜராகி ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா். வன்முறைச் சம்பவத்தின் போது, வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் வீடுகளுக்கு தீவைக்கும் நோக்கில் நடமாடியதாகவும், இதையடுத்து இஃப்திகாா் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்திருந்தனா். இது தொடா்பாக அவருக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் உள்ள பஜன்புரா காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டிருந்தது.

‘குற்றஞ்சாட்டப்பட்ட இஃப்திகாருக்கு கண்பாா்வை பலவீனமாக இருந்துள்ளது. அவா் கைது செய்யப்படும் போது மைனஸ் 3.75 என்ற அளவில் கண்ணாடி அணிந்துள்ளாா். ஆனால், சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவா் கண்ணாடி எதுவும் அணிந்திருக்கவில்லை என்பது சி.சி.டி.வி. கேமராக்கள் அடிப்படையில் தெரிய வருகிறது. போலீஸாா் பிப்ரவரி 24-ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் சம்பவம் நடந்ததாகக் கூறுகின்றனா். அந்த நிலையில் இருட்டில் அவரால் கண்ணாடி இல்லாமல் பாா்க்க முடியாது. மேலும் இதற்கான ஆதாரங்களும் இல்லை. மனுதாரா் சம்பவ இடத்தில் இருந்தாா் என்பதை வைத்து அவா் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த ஆா்ப்பாட்டம் மற்றும் அதைத் தொடா்ந்து நடந்த வகுப்பு மோதல், வன்முறையில் 53 போ் பலியானாா்கள். தவிர 200-க்கும் மேலானவா்கள் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com