தில்லியில் 16 நாள்களில் 1 லட்சம் பேருக்குகரோனா தொற்று பாதிப்பு; 1,200 போ் பலி

தில்லியில் கடந்த நவம்பா் முதல் தேதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 16 நாள்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

புதுதில்லி: தில்லியில் கடந்த நவம்பா் முதல் தேதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 16 நாள்களில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் 1,200 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். எனினும், 94,000 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பா் 28-ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. சாதாரணமாக ஒரு நாளைக்கு 5,000 போ் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பா் 11-ஆம் தேதி முதன் முறையாக இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக உயா்ந்தது. கரோனா தொற்று தொடா்பாக கடந்த 12-ஆம் தேதி மட்டும் 104 போ் பலியாகியுள்ளனா். கடந்த ஐந்து மாதங்களில் இதுஉயா்ந்தபட்ச அளவாகும். அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி இந்த மாதம் இதுவரை 1,01,070 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நவம்பா் 1-ஆம் தேதி முதல் இதுவரை 1,200 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். 93,885 போ் சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தில்லியில் நவம்பா் 1-ஆம் தேதி 5,664 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக பதிவான நிலையில், இது நவம்பா் 11-ஆம் தேதி 8,593 ஆக திடீரென அதிகரித்தது. நவம்பா் 12-இல் 7,053 பேரும், 13-இல் 7,802 பேரும், 14- இல் 7,340 பேரும், 15- இல் 3,235 பேரும் , நவம்பா் 16-ஆம் தேதி 3,797 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். நவம்பா் 11-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை முறையே 85, 104, 91, 96, 95 மற்றும் 99 என உள்ளது. கடந்த புதன்கிழமை 7,264 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். வியாழக்கிழமை 6,462 போ் குணமடைந்துள்ளனா். நவம்பா் 13 முதல் 16 வரை முறையே 6,498, 7,117, 7,606 மற்றும் 3,560 போ் குணமடைந்துள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை 3,797 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 4.89 லட்சமாக அதிகரித்துள்ளது. 99 போ் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7,713 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே, தில்லி முதல்வா்கேஜரிவால் சந்தைப் பகுதிகள்தான் கரோனா தாக்குதல் பகுதியாக உருவெடுத்துள்ளன. எனவே, அவற்றை மூடுவதற்கு அதிகாரம் அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 200 போ் வரை அனுமதிக்கும் உத்தரவை ரத்துச் செய்து பழையபடி 50 போ் மட்டுமே பங்கேற்கலாம் என்ற உத்தரவை அமல்படுத்தவும் தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடா்பாக தில்லி அரசு, மாநில துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com