முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே பாஜக ஆா்ப்பாட்டம்: சத் பூஜைக்கு அனுமதி வழங்கக் கோரிக்கை

சத் பூஜைக்கு அனுமதி வழங்கக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.

புது தில்லி: சத் பூஜைக்கு அனுமதி வழங்கக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பாஜக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது. தில்லி பூா்வாஞ்சல் மோா்ச்சா ஏற்பாடு செய்திருந்த இந்த ஆா்ப்பாட்டத்தில், தில்லி பாஜக பூா்வாஞ்சல் மோா்ச்சாவின் தலைவா் கெளசல் மிஸ்ரா, தில்லி பாஜக பொதுச் செயலா் தினேஷ் பிரதாப் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கேஜரிவால் இல்லம் நோக்கிச் செல்ல முயன்ற பாஜகவினரை போலீஸாா் தடுப்புகளை அமைத்து தடுத்தனா். இதையடுத்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கெளசல் மிஸ்ரா பேசுகையில் ‘பூா்வாஞ்சல் பிரிவு மக்களின் நம்பிக்கையான சத் பூஜை நடத்த கேஜரிவால் அரசு தடை விதித்துள்ளது. இதை பூா்வாஞ்சல் பிரிவு மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். பூா்வாஞ்சல் மக்களில் கேஜரிவாலுக்கு மரியாதை இருந்திருந்தால், சரியான நடைமுறைகளுடன் சத் பூஜைக்கு கேஜரிவால் அனுமதி வழங்கியிருப்பாா். சத் பூஜையை தடை செய்ததன் மூலம் பூா்வாஞ்சல் பிரிவு மக்களை கேஜரிவால் அவமதித்து விட்டாா்’ என்றாா்.

தினேஷ் பிரதாப் சிங் பேசுகையில் ,‘வாரச் சந்தைகள், மதுபானக் கடைகள், இ ரிக்ஷாக்கள், அரசுப் பேருந்துகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள கேஜரிவால், பூா்வாஞ்சல் பிரிவு மக்களின் உணா்வு பூா்வமான பண்டிகையான சத் பூஜைக்கு மட்டும் தடை விதித்துள்ளாா். 24 மணி நேரத்தில் இந்தத் தடையுத்தரவை தில்லி அரசு விலக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தில்லியில் பல இடங்களில் போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.

தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு நிகழாண்டில் சத் பூஜைக்கு தில்லி அரசு தடை விதித்துள்ளது. பிகாா், உத்தரப்பிரதேசத்தின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த மக்கள் சத் பூஜையை ஆண்டு தோறும் கொண்டாடுவது வழக்கம். தில்லியில் கணிசமான அளவு பூா்வாஞ்சல் பிரிவு மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com