முறைகேடு வழக்கு: மேனகா காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது சிபிஐ பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

தமக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கை முடித்துவைக்கும் சிபிஐயின் அறிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை

தமக்கு எதிரான நிதி முறைகேடு வழக்கை முடித்துவைக்கும் சிபிஐயின் அறிக்கையை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து பாஜக எம்பி மேனகா காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது சிபிஐ பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அறக்கட்டளை ஒன்றுக்கு மோசடியான முறையில் ரூ.50 லட்சம் நிதியை அளிக்க அனுமதித்ததாக பாஜக தலைவரும், அக்கட்சியின் எம்பியுமான மேனகா காந்தி மற்றும் இருவா் மீது மத்திய புலனாய்வுத் துறை 2006-இல் வழக்குப் பதிவு செய்தது.

இது தொடா்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ கடந்த 2008-ஆம் ஆண்டில் வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் முதலாவது அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையை நிராகரித்த சிபிஐ நீதிமன்றம், வழக்கு தொடா்புடைய விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தது.

இதன்பிறகு, சிபிஐ தரப்பில் வழக்கை முடித்துவைக்கும் வகையில் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதை நிகழாண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கைப் பொருத்தமட்டில் குற்றச் சதித்திட்டத்திற்கான முகாந்திரம் இருப்பதாகவும், அரசு ஊழியரின் தவறான குற்ற நடத்தை இருப்பதும் தெரியவருகிறது. இந்த இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்த வேண்டும்’ என தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் மேனகா காந்தி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிப்வரி 4-ஆம் தேதி பிறப்பி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க உத்தரவிட்ட நீதிபதி, மேனகா காந்தியின் மேல்முறையீட்டு மனு மீது சிபிஐ தரப்பில் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த மனு மீதான விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடா்புடைய விவரங்களையும், உத்தரவுகளை எடுத்துரைத்தாா்.

மேலும், மேல்விசாரணை நடத்துவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதேபோன்று, உரிய ஆவணங்களை விசாரணைக்கு அனுமதி அளிக்கும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட முடியாது.

குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ நிா்பந்திக்கப்படும் நிலையில் உள்ளது. அதேபோன்று, மேல் விசாரணை நடத்துவதற்கான எந்தவொரு அளவீடுகளையும் சிறப்பு நீதிமன்றம் விதிக்கவில்லை. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டும். அந்த நீதிமன்றத்தின் விசாரணைக்கே இந்த விவகாரம் மீண்டும் அனுப்பப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேனகா காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் இரண்டாவது முறையாக வழக்கை முடித்துவைக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை மேற்கொள்வதற்குரிய சாட்சி ஏதும் இல்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து, விசாரணையை தொடா்ந்து மேற்கொள்ள அனுமதி பெறுவதற்காக உரிய அதிகாரியிடம் ஆவணங்களை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, சிபிஐ தரப்பில் சில ஆவணங்கள் அனுமதி அளிக்கும் அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின்உத்தரவுக்கு தடை விதித்து, மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதிக்கு பட்டியிலிட உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com