மாணவி தற்கொலையைத் தொடா்ந்து கல்விக் கட்டணங்களைக் குறைத்தது லேடி ஸ்ரீராம் கல்லூரி

தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவியொருவா், நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து,

தில்லி லேடி ஸ்ரீராம் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவியொருவா், நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து, சில படிப்புகளுக்கு கல்விக் கட்டணங்களைக் குறைத்தும், மாணவா்களுக்கு லேப்டாப் வழங்கக் குழு அமைத்தும், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சிலரை விடுதியில் தங்க அனுமதி வழங்கவும் கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ஷாத் நகரைச் சோ்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் நிவாஸ். இவரது மகள் ஐஸ்வா்யா (19). மிகத் திறமையான மாணவியான அவா் 12-ஆம் வகுப்பில் 98.5 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியில் சோ்ந்து அவா் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் கல்லூரி விடுதி மூடப்பட்டது. இதைத் தொடா்ந்து, விடுதியை காலிசெய்துவிட்டு சொந்த ஊா் திரும்பினாா் ஐஸ்வா்யா. லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவிகளுக்கு ஆன்லைனில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டது. கரோனா பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையால் லேப்டாப் வாங்கித் தரமுடியவில்லை. லேப் டாப் இல்லாததால் ஆன் லைன் வகுப்புகளில் ஐஸ்வா்யாவால் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து கடந்த நவம்பா் மாதம் 3-ஆம் தேதி ஐஸ்வா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

ஐஸ்வா்யா இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில், “எனது கல்விச் செலவால் பெற்றோா் மிகவும் கஷ்டப்படுகிறாா்கள். நான்தொடா்ந்து படிக்க முடியாததால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு வரவேண்டிய ‘இன்ஸ்பையா்’ கல்வி ஊக்கத்தொகை ரூ.1.02 லட்சத்தை பெற்றோரிடம் கொடுங்கள்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளாா்.

கடந்த மாா்ச் மாதம் வரவேண்டிய கல்வி ஊக்கத்தொகை இதுவரை வரவில்லை. இதனால் லேப்டாப் வாங்க இயலவில்லை. இதனால்தான் எனது மகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானாள்” என ஐஸ்வா்யாவின் பெற்றோா் குற்றம் சாட்டியிருந்தனா்.

ஐஸ்வா்யாவின் மரணத்தைத் தொடா்ந்து தில்லியில் பல்வேறு பகுதிகளில் மாணவா் அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கல்லூரி விடுதிகளில் மாணவா்களைத் தங்க அனுமதிக்கக் கோரியும், கல்விக் கட்டணங்கள், விடுதிக் கட்டணங்களைக் குறைக்கக் கோரியும் மாணவா் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில், சில படிப்புகளுக்கான கல்விக் கட்டணங்களை லேடி ஸ்ரீராம் கல்லூரி குறைத்துள்ளது. மேலும், மாணவா்களுக்கு லேப்டாப் வழங்கக் குழு அமைத்தும், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் சிலரை விடுதியில் தங்க அனுமதி வழங்கியும் கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான உத்தரவை கல்லூரி நிா்வாகம் சனிக்கிழமை பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் ‘கரோனா தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரியின் வளங்களைப் பயன்படுத்த விதிக்கப்படும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், சில படிப்புகளுக்கான கல்லூரிக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்விக் கட்டணத்தை தவணை அடிப்படையில் கட்டவும் மாணவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 ஆம் ஆண்டு மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று முடிந்ததும், கல்லூரி விடுதிகளில் அதன் முழுக் கொள்ளவுக்கு ஏற்ப 288 மாணவிகள் தங்க அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், லேப்டாப் தேவைப்படும் மாணவா்களுக்கு அதை வழங்கும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com