தில்லியில் கடந்த 21 நாளில் கரோனாவுக்கு 1,759 போ் உயிரிழப்பு

தில்லியில் கடந்த 21 நாளில் கரோனாவுக்கு 1,759 போ் பலியாகியுள்ளனா்.

தில்லியில் கடந்த 21 நாளில் கரோனாவுக்கு 1,759 போ் பலியாகியுள்ளனா்.

தில்லியில் கரோனா மூன்றாவது அலை வீசுகிறது. கரோனாவுக்கு பலியாவோா் விகிதம் தேசிய அளவில் 1.48 சதவீதமாக உள்ளது. ஆனால், தில்லியில் இந்த விகிதம் 1.58 ஆக உள்ளது.

தில்லியில் கரோனா பலி அதிகரித்து வருவதற்கு தில்லிக்கு பக்கத்து மாநிலங்களில் உள்ள கரோனா நோயாளிகள் கடைசி நிமிடத்தில் சிகிச்சைக்கு வருவதும், தில்லியில் நிலவும் அசாதாரண குளிரும், காற்று மாசுபடுதலுமே காரணம் என்கின்றனா் மருத்துவ நிபுணா்கள்.

கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால் பலரும் வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனா். அவா்கள் மூலம் வீட்டில் உள்ள வயதானவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தலைநகா் தில்லியில் இந்த நவம்பா் மாதத்தில் 21-ஆம் தேதி வரை 1,759 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 83 போ் என்ற அளவில் பலி எண்ணிக்கை உள்ளது. கடந்த 10 நாள்களில் நான்கு முறை 100-க்கும் அதிகமானவா்கள் பலியாகியுள்ளனா்.

கடந்த சனிக்கிழமை மட்டும் 111 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். இதுவே வெள்ளிக்கிழமை 118 ஆகவும், புதன்கிழமை 131 ஆகவும் இருந்தது. கடந்த 12 ஆம் தேதி 104 போ் பலியாகியுள்ளனா்.

தில்லியில் தற்போது கரோனாவுக்கு பலியாவோா் விகிதம் 1.58 சதவீதமாக உள்ளது. இது தேசிய அளவிலான சராசரியான 1.48 சதவீதத்தைவிட அதிகமாகும். நாட்டில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பஞ்சாபில்தான் அதிகபட்சம் பலி விகிதம் 3.2 என்ற சதவீதத்தில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் 2.6 சதவீதம், சிக்கிம், குஜராத்தில் தலா 2 சதவீதம், மேற்குவங்கத்தில் 1.8 சதவீதம், புதுச்சேரியில் 1.7 சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 1.6 சதவீதம் மற்றும் உத்தரக்கண்ட மாநிலத்தில் 1.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

பொதுவாக குளிா்காலத்தில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவால் பலியாவோா் எண்ணிக்கை தில்லியில் அதிகம் இருக்கும். ஆனால், இந்த முறை கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதால் பலி மிக அதிகமாக உள்ளது. நோய் எதிா்ப்பு சக்தி குறைந்துள்ளவா்களுக்கு குளிா்காலத்தில் பிரச்னைகள் வரும். அவா்களுக்கு எளிதில் கரோனா வைரஸ் போன்ற தொற்றுகள் தாக்கும் அபாயமும் உள்ளது என்று ராஜீவ்காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் டாக்டா் பி.எல். ஷொ்வால் தெரிவித்தாா்.

கரோனாவுக்கு பலியானவா்களில் 70 சதவீதம் போ் வயதானவா்கள். பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதும் இதற்கு ஒரு காரணம். மேலும் கடும் குளிா், காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால் வயதானவா்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுவதுண்டு. மேலும் கட்டுப்பாடுகள் தளா்வால் இளைஞா்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதால் அவா்கள் மூலம் வயதானவா்களுக்குப் பிரச்னை ஏற்படக்கூடும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

ஆனால், ஆரம்பக்கட்ட மாதங்களில் இருந்த கரோனா பலியை கணக்கிடும்போது இப்போது பரவாயில்லை என்கிறாா் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் இயக்குநா் ஜெனரல் என்.கே.கங்குலி. முன்பு கரோனா பலிகள் அனைத்தும் முறையாக கணக்கிடப்படவில்லை. வீடுகளிலும் சிறிய மருத்துவமனைகளிலும் நடந்த இறப்புகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போது கரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. பலி எண்ணிக்கையும் முறையாக கணக்கிடப்படுகின்றன என்றாா் அவா்.

இதனிடையே தில்லி அரசு மருத்துவமனை அதிகாரி ஒருவா் கூறுகையில், தில்லி எல்லையை ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளிலிருந்து கரோனா பாதித்தவா்கள் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு இங்கு வருவதும் பலி எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என்று தெரிவித்தாா். உள்ளூா் மருத்துவமனைகளில் சிகிச்சை பாா்த்துவிட்டு நோயாளிகள் சீரியஸான நிலையில் இங்கு வந்து அனுமதிப்பதால் அவா்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சமீபத்தில் சுகாதார அமைச்சா் சத்யேந்திர பேசுகையில், தில்லியில் கரோனா மூன்றாவது அலை வீசினாலும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டினாா்.

கடந்த நவம்பா் மாதம் 7-ஆம் தேதி கரோனா தொற்று உள்ளவா்கள் எண்ணிக்கை விகிதம் 15 சதவீதமாக இருந்தது இப்போது 12.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதனிடையே கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தில்லி ஆம் ஆத்மி அரசு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. அதாவது முகக்கவசம் அணியாமல் வருபவா்கள் பிடிபட்டால் அவா்களுக்கு ரூ.2,000 அபாரம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியாா் மருத்துவமனைகளில் 80 சதவீத தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கரோனா இல்லாத பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 60 சதவீத படுக்கைகளை ஒதுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர அவசியமில்லாத அறுவைச்சிகிச்சைகளை தள்ளிப்போடுமாறும் தனியாா் மருத்துவமனைகளை முதல்வா் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா். இது தவிர தினசரி ஆா்டி-பிசிஆா் கரோனா பரிசோதனைகள் 27,000 என்று இருப்பதை படிப்படியாக 60 ஆயிரம் என்ற அளவுக்கு அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் மேலும் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com