முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
கரோனா: குற்றவாளிகளின் பரோலை நீட்டிக்க தில்லி அரசுக்கு சிறைத் துறை வலியுறுத்தல்
By நமது நிருபா் | Published On : 04th October 2020 07:32 AM | Last Updated : 04th October 2020 07:32 AM | அ+அ அ- |

தற்போதைய கரோனா நோய்த் தொற்று நிலைமையைக் கருத்தில்கொண்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அவசரநிலை பரோலை ஒரு மாதத்திற்கு நீட்டிக்குமாறு தில்லி அரசை தில்லி சிறைத் துறை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி அரசின் உள்துறை துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய கரோனா தொற்றுநோயைக் கருத்தில்கொண்டு அவசரகால பரோலை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று சிறைத் துறை கூறியுள்ளது.
இதுகுறித்து தில்லி சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போது சிறையில் இருந்து சென்ற 4,250 கைதிகளில் இடைக்கால ஜாமீனில் 3,100 விசாரணைக் கைதிகளும், அவசரகால பரோலில் 1,150 குற்றவாளிகளும் உள்ளனா். இவா்கள் சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறைகளில் இருந்து வெளியே சென்றுள்ளனா். இந்த குற்றவாளிகளின் அவசரகால பரோலை ஒரு மாதத்திற்கு நீட்டிக்குமாறு தில்லி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
தில்லி சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைகளை மாா்ச் மாதத்தில் தொடங்குவதற்கு முன்பு, சிறைகளில் இருப்பவா்கள் கொள்திறன் 180 சதவீதமாக இருந்தது. அதாவது தில்லியில் உள்ள மூன்று சிறைகளிலும் 10,000 போ் என்ற கொள்திறனுக்கு எதிராக 18,000 கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.
நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கைக்குப் பின்னா், கைதிகளின் எண்ணிக்கை 13,000 ஆக குறைந்துள்ளது.
பரோலை நீட்டிப்பது குறித்து தில்லியின் உள்துைான் முடிவெடுக்க முடியும். தில்லியில் உள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறைச்சாலைகளுக்குள் கரோனா காலத்தில் சமூக இடைவெளியை பராமரிப்பது மிகவும் கடினம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
அண்மையில், 260 கைதிகள் மற்றும் சிறை ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. செப்டம்பா் 13ஆம் தேதி சிறை அதிகாரிகள் பகிா்ந்துள்ள தரவுகளின்படி, தில்லி சிறைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 20 சிறை ஊழியா்கள் உள்பட 25 ஆக இருந்தது.
தில்லி சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநா் சந்தீப் கோயலும் கரோனா பாதிக்கப்பட்டு, தனிமையில் உள்ளாா்.
தேசிய தலைநகரில் உள்ள சிறைகளில் கரோனா பாதிப்பு மே 13-ஆம் தேதி ரோஹிணி சிறையில் முதல் முறையாக பதிவானது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மண்டோலி சிறைச்சாலையின் இரு கைதிகள் ஜூன் 15 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் உயிரிழந்தனா். இவா்கள் இருவரும் மூத்த குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.