முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியில் ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்
By நமது நிருபா் | Published On : 04th October 2020 07:33 AM | Last Updated : 04th October 2020 07:33 AM | அ+அ அ- |

தேசிய தலைநகா் தில்லியில் சனிக்கிழமை காற்றின் தரம் ’மிதமான’ பிரிவில் பதிவாகி இருந்தது. ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் இதே நிலையில் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது. இரவில் புழுக்கம் குறைந்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 182 ஆகவும், மாலையில் 174 ஆகவும் ‘மிதமான பிரிவில்’ பதிவாகி இருந்தது.
காற்றின் தரம் பூஜ்யம் மற்றும் 50- க்கு இடையில் இருந்தால் ‘ நன்று’, 51 மற்றும் 100-க்கு இடைப்பட்டதாக இருந்தால் ‘திருப்தி’, 101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட அளவில் இருந்தால் ‘மிதமான ’, பிரிவிலும், 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டதாக இருந்தால் ‘மோசம்’ பிரிவிலும், 301 மற்றும் 400-க்கு இடைப்பட்டதாக இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும் இருக்கும்.
இதனிடையே, அடுத்து வரும் இரு தினங்களில் தில்லியில் காற்றின் தரம் மாறக் கூடும் என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (சஃபா்) தெரிவித்துள்ளது.
பஞ்சாப், ஹரியாணா மற்றும் தில்லியின் அண்டை எல்லைப் பகுதிகளைச் சுற்றி வெள்ளிக்கிழமை பயிா்க் கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் அதிகரித்திருந்ததாகவும், இது வரும் நாள்களில் தில்லியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு காணப்பட்டுகிறது. வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு புள்ளிகள் குறைந்து 20.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கமானதை விட ஒரு புள்ளி குறைந்து 20.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 புள்ளிகள் அதிகரித்து 36.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.
குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் தேக்கநிலை ஆகியவை நிலத்திற்கு அருகில் மாசுபடுத்திகளைக் குவிக்க காரணமாக அமைவதால், இது காற்றின் தரத்தை பாதிக்கிறது.