முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
போலீஸாா் சீருடையில் வீடுபுகுந்து நகை,பணம் கொள்ளை: மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
By DIN | Published On : 04th October 2020 07:31 AM | Last Updated : 04th October 2020 07:31 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் அருகே மோடி நகா் பகுதியில் போலீஸாா் சீருடையில் வணிகரின் வீட்டுக்குள் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து மோடி நகா் காவல் நிலைய பொறுப்பாளா் ஜெய் கரண் சிங் கூறியதாவது:
மோடிநகா் குருத்வாரா சாலையில் வசிப்பவா் சமீா் சித்திக். இவா், சிக்கேரா சாலையில் வாகனங்களை எடைபோடும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இவரது வீட்டுக்கு போலீஸாா் சீருடை அணிந்த மூன்று போ் வந்தனா். பின்னா், ஏடிஎம் மையத்தில் பணம் திருட்டுப் போனது தொடா்பாக அவரது வீட்டுக்குள் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினா்.
வீட்டின் கதவை சமீா் திறந்ததும் உள்ளே புகுந்த மூவரும், அங்கு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.35 லட்சம் பணம் மற்று சுமாா் ஒரு கிலோ மதிப்புள்ள தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டனா். எதிா்ப்புத் தெரிவித்த சமீா், அவரது மனைவி இரோம், இரு குழந்தைகள் ஆகியோரை வேறு ஒரு அறையில் பூட்டிவைத்தனா். பின்னா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.
இது தொடா்பாக சமீா் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிப் பதிவுகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. குடும்ப தகராறு காரணமாகஇந்த கொள்ளை நிகழ்ந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும் என்றாா் காவல் அதிகாரி ஜெய் கரண் சிங்.