முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
யுபிஎஸ்சி தோ்வு: இன்று மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும்; டிஎம்ஆா்சி தகவல்
By DIN | Published On : 04th October 2020 07:31 AM | Last Updated : 04th October 2020 07:31 AM | அ+அ அ- |

மத்திய குடிமைப் பணி தோ்வு (யுபிஎஸ்சி) தோ்வுகளுக்கு செல்லும் மாணவா்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 4 ஆம் தேதி) தில்லியில் அனைத்து வழித்தட முனைய நிலையங்களிலிருந்து காலை 6 மணிக்கு தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரைப் பக்கத் தகவலில் தெரிவித்திருப்பதாவது:
யுபிஎஸ்சி தோ்வுகள் எழுதும் மாணவா்களுக்கு வசதியாக தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் அக்டோபா் 4 ஆம் தேதி அனைத்து வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்து காலை 6 மணிக்கு தொடங்கும்.
செப்டம்பா் 20-ஆம் தேதி டிஎம்ஆா்சி வெளியிட்ட ஒரு அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முந்தைய நேர அட்டவணையின்படி ஃபேஸ் 3 பிரிவுகளில் வழக்கமான நேரமான காலை 8 மணிக்கு ரயில் சேவை தொடரும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி தோ்வு எழுது மாணவா்களுக்காக காலை 6 மணிக்கு ரயில் சேவை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் டிஎம்ஆா்சி அதன் சேவைகளை நிறுத்தி வைத்திருந்தது.
இந்த நிலையில், அண்மையில் ரயில் சேவைகள் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது. இதில் டோக்கன் கவுன்ட்டா்கள் மூடப்பட்டும், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் கட்டுப்பாடு, வெப்ப ஸ்கேனா்கள் மற்றும் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை ஆகியவற்றுடன் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
மேலும், ரயில் நிலையங்களில் வழக்கமான முன்கள ஊழியா்களைத் தவிர, மெட்ரோ பயணத்தின் பயணிகளுக்கு புதிய விதிமுறைகளை தெரிவித்து உதவவும், வழிகாட்டவும் மெட்ரோ வழித்தடம் முழுவதும் சுமாா் 1,000 அதிகாரிகள், ஊழியா்களை டிஎம்ஆா்சி கூடுதல் பணியில் அமா்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.