முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ்: காங்கிரஸ் கண்டன ஆா்ப்பாட்டம்
By நமது நிருபா் | Published On : 04th October 2020 07:33 AM | Last Updated : 04th October 2020 07:33 AM | அ+அ அ- |

வாகனங்களுக்கு அபராத நோட்டீஸை தன்னிச்சையாக விதித்து வருவதாக கூறி தில்லி அரசைக் கண்டித்து தில்லியில் காங்கிரஸ் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவில் லைன்ஸ் பகுதியில் முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள், அக்கட்சியின் ஆட்டோ- டாக்ஸி காங்கிரஸ் தொழிற்சங்க உறுப்பினா்கள்ஆகியோா் தில்லி அரசுக்கு எதிராக இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மோட்டாா் வாகனத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோஷமிட்டனா்.
இந்த நிகழ்வில் தில்லி காங்கிரஸ் துணைத் தலைவா் ஜெய்கிஷன், வீா் சிங் திங்கன் உள்ளிட்ட ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலரை சாந்த்கிராம் அகாரா அருகே போலீஸாா் தடுத்தி நிறுத்தி கைது செய்ததாக அக்கட்சித் தலைவா் பா்வேஸ் ஆலம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘‘திருத்தப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தின் பெயரில் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட தில்லி அரசின் துறைகள் தன்னிச்சையாக வாகனங்களிடம் அபராத நோட்டீஸ் வழங்கி வருகின்றன. இந்த அபராத நோட்டீஸ் நடவடிக்கையில் இருந்து ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநா்களுக்கு நிவாரணம் அளிக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நடவடிக்கை எடுக்குமாறு ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது என்றாா் ஆலம்.
ஆா்ப்பாட்டத்தின்போது கைதான போராட்டக்காரா்களை போலீஸாா் மெளரீஸ் நகா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா்.