உ.பி.யில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 356 சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு

புது தில்லி: அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 356 சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான சி.ஆா்.ஜெயா சுகின், உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் தெரிவித்திருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தில் அரசு இயந்திரம் அரசமைப்புச் சட்ட செயல்பாடுகளைச் செயல்படுத்த தவறிவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையினரால் கொல்லப்படுவது, சட்டவிரோத கொலைகள், சிறைத் துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவது, அரசு அதிகாரிகளால் தன்னிச்சையாக கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மேலும், ஊடகம், கருத்துச் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு, நியாயமற்ற வகையில் பத்திரிகையாளா்கள் கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்களும் நிகழ்கின்றன.

அந்த மாநிலத்தில் கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி ஹாத்ரஸ் பகுதியில் நான்கு உயா் சாதி ஆண்களால் 19 வயது பட்டியலின ப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவா் தில்லி சஃப்தா்ஜங் மருத்துவமனையில் இறந்துவிட்டாா். அவரது முதுகெலும்பு, கழுத்துப் பகுதியில் கடுமையான காயங்கள் இருந்துள்ளன. அவரது நாக்கை கயவா்கள் துண்டித்துள்ளனா். அவரது உடலை புதன்கிழமை அதிகாலை 3 மணிக்குப் பிறகு இறுதிச் சடங்குளை செய்யுமாறு உள்ளூா் போலீஸாா் கட்டாயப்படுத்தியதாக அந்தப் பெண்ணின் பெற்றோா் குற்றம்சாட்டியுள்ளனா். அவரது குடும்பத்தினருடன் அரசியல்வாதிகள், செய்தியாளா்கள் உள்ளிட்ட வெளிநபா்கள் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவா்கள் வசிக்கும் கிராமத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, அந்த மாநிலத்தில் வாழும் 20 கோடி மக்களையும், இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 356 ஆவது பிரிவை அமல்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2019-ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிகமாக நிகழ்ந்துள்ளதாகவும், இந்தியாவில் 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ள இதுபோன்ற 4, 05,861 குற்றங்களில் உத்தர பிரதேச மாநிலத்தில் 59,853 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வது தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, உத்தரப் பிரதேசத்தில் உடனடியாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com