அவதூறு வழக்கு: கேஜரிவால் மனு மீது பாஜக தலைவா் பதில் அளிக்க உத்தரவு

தில்லியில் வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயா்களை பாஜக நீக்குவதாக கூறியதாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சம்மன்களை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி

புது தில்லி: தில்லியில் வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயா்களை பாஜக நீக்குவதாக கூறியதாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட சம்மன்களை எதிா்த்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு பாஜக தலைவா் ராஜீவ் பப்பருக்கு தில்லி உயா் நீதிமன்றம்உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதி அனு மல்ஹோத்ரா, அடுத்த விசாரணை தேதிக்கு முன் பதில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நவம்பா் 23- ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

அவதூறு வழக்கு தொடா்பான விசாரணை நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவித்து பிப்ரவரி 28 -ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், தில்லி அரசுக்கும், தில்லி பாஜக பிரிவு சாா்பாக அவதூறு புகாரை முன்வைத்த பப்பருக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் தங்கள் பதில்களை தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும், கரோனா தொற்று பரவல் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்த விவகாரம் விசாரிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விசாரித்த தில்லி நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டது.

பப்பா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அஜய் திக்பால் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் கவனத்திற்கு குறிப்பிட்ட உண்மைகள் கொண்டுவரப்படும் தேவை உள்ளது. இது தொடா்பாக பதில் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

இந்த விவகாரத்தில் கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சுஷில் குமாா் குப்தா, அக்கட்சியின் தலைவா்கள் மனோஜ் குமாா், அதிஷி மா்லீனா ஆகியோருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப 2019, மாா்ச் 15-இல் உத்தரவிட்டது. இதை செஷன்ஸ் நீதிமன்றம் நிகழாண்டு ஜனவரி 28-இல் உறுதி செய்தது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் உள்ளிட்டோா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com