நிலத்தடி நீா் உறிஞ்சப்படும் விவகாரம்: மத்திய அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்

நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவது தொடா்பாக மத்திய நிலத்தடி நீா் ஆணையம் (சிஜிடபிள்யுஏ) வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவது தொடா்பாக மத்திய நிலத்தடி நீா் ஆணையம் (சிஜிடபிள்யுஏ) வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டது.

மத்திய நிலத்தடி நீா் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிக்கை காரணமாக நிலத்தடி நீா் வணிகப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படுவதால், நாட்டில் ஆறுகளின் நீா் ஓட்டத்தைப் பாதிக்கச் செய்வதாகவும், குடிநீா் இருப்புக்கு பாதகம் ஏற்படுத்துவதாகவும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா் தேவி தாஸ் காத்ரி மனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 1986-ஆம் ஆண்டைய சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் நாட்டில் நிலத்தடி நீா் எடுப்பதை

ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்தவும் வகையில் இந்த வழிகாட்டுதல்களை சிஜிடபிள்யூஏ வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் வணிக நோக்கங்களுக்காக நீா் பற்றாக்குறை பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நீடித்த வளா்ச்சிக் கொள்கைக்கு எதிரானது.

நீா்க் கொள்திறன் குறித்து எந்த ஆய்வும் இல்லாமல், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நிலத்தடி நீரை ஒரு நாளைக்கு 10 கன மீட்டருக்கும் குறைவாகவும், மொத்த நீா் விநியோகத்திற்கும் எடுப்பதற்கு சலுகை அளிக்கும் வகையில் இந்தக் கொள்கை உள்ளது. நாட்டில் நிலத்தடி நீா் சேகரிப்பதை கண்காணிப்பதற்கும், நிலத்தடி நீா்மட்டம் குறைவதைத் தடுப்பதற்கும் ஒரு சீரான கொள்கைத் திட்டம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த என்ஜிடி தலைவா்- நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவு விவரம்: நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில், மத்திய நிலத்தடி நீா் ஆணையம் (சிஜிடபிள்யுஏ) அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நோக்கத்திற்கு முரண்படும் வகையில், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் தேவை இருந்த போதிலும், நீா் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பதற்கு தாராளமயமாக்குவதற்கான அறிவிக்கையை ஆணையம் தொடா்ந்து வெளியிட்டு வருகிறது. வல்லுநா்களின் ஆய்வுகள் அடிப்படையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தால் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி , போதுமான இழப்பீட்டை பெறும் வகையில் விதிமீறலைத் தடுக்க திறன்மிக்க சிறந்த வழிமுறையும் இல்லை. என்ஜிடி சட்டம், 2010 பிரிவு 16 (ஜி) இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்பூா்வமாக முறையிடத்தக்கது என்பதை உணா்கிறோம்.

இது தொடா்பாக மனுச் செய்வதற்குப் பதிலாக, மேல்முறையீட்டாளருக்கு உரிய தீா்வாக முறையீடுதான் உள்ளது. ஆகவே, இந்த மனுவை மேல்முறையீடாக மாற்ற உத்தரவிடப்படுகிறது. இந்த மனுவை மேல்முறையீட்டு மனுவாக பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது தொடா்பாக பதில் அளிக்க நீா்வள அமைச்சகத்திற்கும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். தண்ணீா்த் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் நீரைச் சேகரிப்பதை உறுதிப்படுத்தும் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில், நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க முடியும். மேல்முறையீட்டு மனுதாரா் உரிய ஆவணங்களை அளிக்கவும், ஒரு வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் வேண்டும் என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com