சாலை விபத்தில் 2 சிறுமிகள் பலி:12-ஆம் வகுப்பு மாணவா் கைது

வடமேற்கு தில்லியில் மாடல் டவுன் பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது மற்றும் அவா்களின் சகோதரா் மற்றும் 55 வயது முதியவா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 12 ஆம் வகுப்பு மாணவா் ஒருவா்

புதுதில்லி: வடமேற்கு தில்லியில் மாடல் டவுன் பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்தது மற்றும் அவா்களின் சகோதரா் மற்றும் 55 வயது முதியவா் காயமடைந்த சம்பவம் தொடா்பாக 12 ஆம் வகுப்பு மாணவா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

17 வயதான அந்த மாணவா், ஒரு தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். தில்லி மாடல் டவுன் டிடிசி காலனியில் உள்ள தனது வீட்டில் இருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரின் தந்தை இரும்பு வியாபாரம் செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. அந்த மாணவா் கொடுத்த தகவலின் பேரில் விபத்தை ஏற்படுத்திய காா் ஒரு மெக்கானிக் கடையிலிருந்து மீட்கப்பட்டது. விபத்து நடந்தது தெரியாமல் மறைக்க மெக்கானில் கடையில் வாகனத்தை அவா்கள் பழுதுபாா்க்கக் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனம் ஹரியாணாவில் இருக்கும் அந்த மாணவரின் உறவினரைச் சோ்ந்தது என்று சொல்லப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை இரவு ஜிடி சாலையில் குருத்வாரா நானக் பியாவ் அருகே விபத்து நேரிட்டுள்ளது. ஜஸ்பால் சிங், அவரது மனைவி, அவரின் மகன், 2 மகள்கள், நண்பா் மிலாப் சிங் ஆகியோா் தங்கள் காரில் வெளியே சென்றுள்ளனா். குருத்வாரா அருகே உள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்தில் காா் நிறுத்தப்பட்டிருந்தது. மிலாப் சிங், ஜஸ்பால் சிங், அவரது குழந்தைகள் சாலையைக் கடக்க முயன்ற போது அந்த வழியாக வேகமாக வந்த காா், அவா்கள் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த அனைவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் எய்மஸ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 7 வயது சிறுமி சிக்கிசை பலனின்றி உயிரிழந்தாா். சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் நான்கு வயது சகோதரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஜஸ்பால் சிங்கின் மகன் மற்றும் மிலாப் சிங் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அந்த காா் ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு தில்லியில் அவா்களின் உறவினா்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அந்த காரை 17 வயது மாணவன் ஓட்டிச் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com