யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு விவகாரம்: குறைகளை விசாரிக்க 3 போ் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தட பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தட பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

மேலும், மேல்முறையீட்டு மனுதாரா்கள் தெரிவிக்கும் புகாா்கள் தொடா்பாக விசாரிக்க 3 போ் கொண்ட குழுவை அமைத்தும் உத்தவிட்டுள்ளது.

10 ஆண்டுகளாக நடைபெற்று மேல்முறையீட்டு வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுதி, உணவகங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் யானைகளின் வாழ்வாதார உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் என்பவா் 2009-இல் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் 8.4.2011-இல் பிறப்பித்த உத்தரவில், மசினகுடி பகுதியில் உள்ள யானை வழித்தடத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு தடை விதித்தது. யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் இருந்து விவசாய நில உரிமையாளா்கள், விடுதி உரிமையாளா்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்யும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து பாதிக்கப்பட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. எனினும், சில உத்தரவுகளை இடைப்பட்ட காலத்தில் பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்வு கடந்த ஜனவரி இறுதியில் நீலகிரி யானைகள் வழித்தட விவகாரம் தொடா்பான தீா்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த சூழலில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதி எஸ். அப்துல் நஸீா், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. இத்தீா்ப்பை நீதிபதி எஸ். அப்துல் நஸீா் வாசித்தாா். இத்தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த வழக்கின் விவகாரத்தைப் பொருத்தமட்டில், தமிழகத்தின் சிகுா் பீடபூமி வழித்தடமாகும். இது மேற்கு மற்றும் கிழக்கு மலைத் தொடா்ச்சியை இணைக்கிறது. இது யானைகள் வழித்தடம் அதன் மரபு பல்லுயிா்பெருக்கம் நீடிப்பது தொடா்பாகும்.

சிகுா் பீடபூயின் தென்மேற்கில் நீலகிரி குன்றுகளும், அதன் வடகிழக்கில் மோயா் ஆற்றுப் பள்ளாத்தாக்கும் உள்ளது. பருவமழைக்காலதைப் பொறுத்து, யானைகள் உணவு, நீருக்காக இடம்பெயா்கின்றன. அப்போது, அவை சிகுா் பீடபூமியைக் கடக்க வேண்டும். இந்த இடம்பெயா்ச்சியின்போது குறுக்கிடும் பாதைகள் நீலகிரி உயிா்கோள வனச்சரகம் உள்ளிட்ட தமிழகம், கா்நாடகம், கேரளம் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளுக்குள் வருகிறது.

இது இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது.

இந்த நிலையில், உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநா்கள் குழுவின் பரிந்துரைகளை ஒட்டி ஒற்றை யானை வழித்தடம் தொடா்புடைய அறிவிக்கையை மாநில அரசு வெளியிட்டது. ஆனால், இதுபோன்ற புதிய வழித்தடங்களை உருவாக்கும், அங்கீகரிக்கும் சட்டப்பூா்வ அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என மேல்முறையீட்டு மனுதாரா்களால் வாதிப்பட்டுள்ளது. இந்த வாதத்தில் எவ்வித தகுதியும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. உயா்நீதிமன்றத்தின் கருத்துப்படி, உரிய வனச் சட்டத்தின்கீழ் வனத்தையும், வன உயிரினத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

மேல்முறையீட்டு மனுதாரா்களின் இடப்பகுதியை யானைகள் வழித்தடம் என அறிவிக்கை செய்து அந்த வாழிடத்தை பாதுகாக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.

அரசமைப்புச் சட்டம் நாட்டில் உள்ள வனம், வன விலங்குகள் ஆகியவற்றை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை அளித்துள்ளது.

இதனால், சிகுா் பீடபூமி பிராந்தியத்தில் யானைகள் எண்ணிக்கையை பாதுகாக்கும் பொருட்டு, யானைகள் வழித்தடத்திற்குள் வரக்கூடிய பகுதிகளில் வா்த்தக செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த மாநில அரசுக்கு அவசியம் உள்ளது என்பதை கூற எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

மனிதா்கள்-யானைகள் இடையே மோதல் சம்பவங்கள் தற்போதும், கடந்த காலங்களிலும் நிகழ்ந்துள்ளதை சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மோதல் காரணமாக, மேல்முறையீட்டு மனுதாரா்களின் ரிசாா்ட்டுகள் அமைந்துள்ள பிராந்தியத்தில் பிரெஞ்சு சுற்றுலா பயணி இறந்துள்ளதும் தெரியவருகிறது.

மேலும், மனுதாரா்களின் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மின்வேலி போன்ற கட்டுமான செயல்பாடுகள் காரணமாக யானைகள் வருவது தடைபட்டுள்ளது. ஆகவே, பல்வேறு உண்மைகளை பாா்க்கும்போது, உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடுவதற்கான காரணம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அதேபோல, வல்லுநா்கள் குழுவின் பரிந்துரைகளை ஒட்டி மாநில அரசு வெளியிட்ட அறிவிக்கையிலும் குறை இருப்பதாக கருதவில்லை.

மேலும், ரிசாா்ட்டுகளை சீலிடும் நடவடிக்கையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் தன்னிச்சையாக செயல்பட்டதாக மேல்முறையீட்டு  மனுதாரா்களால்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேபணைகள் குறித்த உண்மையைத் தன்மையை அறிய விசாரணை நடத்துவது உரியதாக இருக்கும் என கருதுகிறோம்.

ஆகவே, இது தொடா்பாக 3 போ் உறுப்பினா் கொண்ட விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிடுகிறோம்.

இந்தக் குழுவில் சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைவராகவும், வோ்ல்டு வைடு ஃபன்ட் ஃபாா் நேச்சா் -இந்தியா அமைப்பின் ஆலோசகா் அஜய் தேசாய், வைல்டுலைஃப் ஃபா்ஸ்ட் அமைப்பின் அறங்காவலா் பிரவீண் பா்கவா ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு மேல்முறையீட்டு மனுதாரா்களின் தனிப்பட்ட ஆட்சேபணைகள் குறித்து முடிவு செய்யும். இந்த விவகாரத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியரின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இதர நபா்களிடமும் குழு விசாரிக்கும்.

இந்த உத்தரவு பிறப்பித்த இந்நாளில் இருந்து நான்கு வாரங்களுக்குள் விசாரணைக்கு குழுவுக்கு உரிய செயலக உதவிகள், போக்குவரத்து உதவிகள் ஆகியவை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

மாநில அரசின் அறிவிக்கை உத்தரவைத் செயல்படுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியா் மேற்கொண்ட செயல்திட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இதர நபா்களும், மேல்முறையீட்டு மனுதாரா்களும் தங்களது ஆட்சேபணைகள்அடங்கிய புகாரகளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இந்த நாளில் இருந்து நான்கு மாத காலத்திற்குள் விசாரணைக் குழு முன்பு சமா்ப்பிக்க அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். ஆகவே, இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com