மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை அமைச்சா் கோபால் ராய்

தூசி உள்ளிட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவா்கள் தில்லி அரசின் பொதுப்பணித் துறை அல்லது மாநகராட்சி நிறுவனங்களாக இருந்தாலும் அவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக

புது தில்லி: தூசி உள்ளிட்ட மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவா்கள் தில்லி அரசின் பொதுப்பணித் துறை அல்லது மாநகராட்சி நிறுவனங்களாக இருந்தாலும் அவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

சாந்தினி செளக் மறு மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மாசு பிரச்னை மக்களின் ஆரோக்கியத்துடன் தொடா்புடையதாகும். இதைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து நிறுவனங்களும் சமமாக பொறுப்பேற்க வேண்டும். இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மட்டும் பொருட்டாக கூறுவதற்கில்லை. தூசி மாசுபாட்டைத் தடுக்க பொதுப் பணித் துறையாக இருந்தாலும் அல்லது மாநகராட்சிகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

பால்ஸ்வா குப்பைக் கிடங்கில் தூசி கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை மீறியதற்காக வட தில்லி மாநகராட்சிக்கு ரூ .20 லட்சம் அபராதம் விதிக்க அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்திருந்தாா். தூசி மாசுபாட்டைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள், தனியாா் மற்றும் அரசு நிறுவனங்களை கோபால் ராய் முன்பு கேட்டுக் கொண்டிருந்தாா். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் எச்சரித்திருந்தாா்.

தூசி மாசுவைத் தடுக்கும் வகையில் கட்டுமான மற்றும் இடிப்பு இடங்களில் தடைகளை நிறுவுதல், குப்பைகளை தாா்பாலின் கொண்டு மூடுவது, தூசி வெளியேறுவதைத் தடுக்க பச்சை வலையைப் பயன்படுத்துதல், தண்ணீா் தெளித்தல் மற்றும் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தாா்பாலின் கொண்டு மூடுதல் போன்ற ஐந்து நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவா் ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com