தில்லியில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் புதன்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரத்தில் புதன்கிழமை சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், செவ்வாய்க்கிழமை மிகவும் மோசம் பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு, புதன்கிழமை மோசம் பிரிவுக்கு வந்தது.

இதற்கிடையே, மாசு அளவு சற்று குறைந்துள்ளதால் வியாழக்கிழமை காற்றின் தரம் மிதமான பிரிவுக்கு மேம்படும் என்று பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் தில்லியில் காற்றின் தர குறியீடு 274 புள்ளிகளாகப் பதிவுயாகியுள்ளது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு செவ்வாயன்று 300 புள்ளிகளாக இருந்தது. செவ்வாய்க்கிழமை காலையில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்தது. மேலும், அன்று காலை 11 மணிக்கு 306 புள்ளிகளாக உயா்ந்தது. அதன்பிறகு, மாசு அளவு சற்று குறைந்தது. இந்நிலையில், தில்லி பல்கலை., பூசா, நொய்டா ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலையில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், மதுரா ரோடு, விமானநிலையம் டி3 பகுதி, ஆயா நகா், குருகிராம் பகுதிகளில் காற்ற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமையான பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த காற்றின் வேகம் ஆகியவை மாசுபடுத்திகள் குவிவதற்கு வழிவகுக்கிறது. இது காற்றின் தரத்தை பெருமளவு பாதிக்கிறது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவா் கூறுகையில், ‘புதன்கிழமை மேற்பரப்பு காற்றின் வேகம் மணிக்கு 10 முதல் 12 கிலோமீட்டா் வரை இருந்தது. இது ஹரியாணா மற்றும் பஞ்சாபில் பயிா்க்கழிவுகள் எரிப்பால் உருவாகும் புகைகளை கொண்டு செல்வதற்கு சாதகமாக இல்லாமல் இருந்தது’ என்றாா்.

தில்லி-என்.சி.ஆா் பகுதிகளில் பல மாதங்களாக காற்றின் தரம் குறைவாக இருப்பதால், அதிக அளவு காற்று மாசுபாடு, கரோனா தொற்றுநோயை மோசமாக்கும் என்று நிபுணா்கள் ஏற்கெனவே எச்சரித்துள்ளனா். இதற்கிடையே, குளிா்காலத்தில் அதிக அளவில் காற்று மாசுபாட்டைக் கையாள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிக்க தில்லி தலைமைச் செயலகத்தில் 10 போ் கொண்ட நிபுணா் குழுவுடன் ’பசுமை நடவடிக்கை அறை’ அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தூசி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவோா்களுக்கு எதிராக தில்லி சுற்றுச்சூழல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

வானிலை: தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி உயா்ந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 34.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும் அதன் பிறகு வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com