‘வன விலங்குகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன’

யானைகள் வழித்தடம் தொடா்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள சிறப்புமிக்க தீா்ப்பு மூலம் யானைகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன 

புது தில்லி: யானைகள் வழித்தடம் தொடா்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள சிறப்புமிக்க தீா்ப்பு மூலம் யானைகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன என்று இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து ‘தினமணி’யிடம் புதன்கிழமை அவா் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், முதுமலைப் பகுதியில் யானைகள் வழித்தடத்தைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி நான் 2009-இல் தொடுத்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் 2011-இல் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் யானை வழித்தடத்தில் உள்ள ரிசாா்ட்டுகள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களையும் அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் இறுதித் தீா்ப்பை அளித்துள்ளது. அதில் உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு, சரித்திர முக்கியத்துவமிக்கதாகும். இந்தத் தீா்ப்பை வாசித்த போது நீதியரசா் அப்துல் நஸீா், என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு என் முயற்சிகளைப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டாா். இந்த வாா்த்தைகள் என்னுடைய முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய கட்டணமாகும். இந்தத் தீா்ப்பின் மூலம் யானைகளுக்கு நியாயம் கிடைத்துள்ளது. மேலும், விலங்குகளுக்கு வாழும் அடிப்படை உரிமை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உயா்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் கடைமைப்பட்டுள்ளோம். இனிமேல் யானைகள் இடம்பெயா்வதில் இடையூறுகள் ஏதும் இருக்காது. அங்கு இனிமேல் முள்வேலி, மின்வேலி உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் ஏதும் இருக்க முடியாது.

இந்த வழக்கின் போது யானைகள் வழித்தடத்திற்கான நிலத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறி, 7,360 ஹெக்டோ் நிலத்தை அப்போதிருந்த மாநில அரசு கையகப்படுத்த ஆணையிட்டது. தற்போதைய அரசும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக இருந்தது. யானைகளுக்கும், விலங்குகளுக்கும் அடிப்படை வாழ்வுரிமை உண்டு என்பதுதான் என் நிலைப்பாடு. இந்தத் தீா்ப்பு அதை உறுதி செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com