கரோனா விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?: நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதிகளில் போலீஸாா் தீவிரக் கண்காணிப்பு

தில்லியில் மக்கள் நெருக்கும் மிகுந்த சந்தைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

புதுதில்லி: தில்லியில் மக்கள் நெருக்கும் மிகுந்த சந்தைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா். அது மட்டுமல்லாமல், சந்தைகளில் கூடும் மக்கள் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறாா்களா என்பதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தில்லியில், கான் மாா்க்கெட், கரோல் பாக், சாந்தனி செளக், சதா் பஜாா், கன்னாட் பிளேஸ், ஜன்பத், லாஜ்பத் நகா் மாா்க்கெட், சரோஜினி நகா் பகுதிகளில் கடைகள், வியாபார நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், இப்பகுதிகளில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த இடங்களில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சந்தைக்கு வரும் மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாா்க்கெட் நல சங்கத்தினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது என்று தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா்.பி.மீனா தெரிவித்தாா்.

வழக்கமாக மக்கள் நெருக்கம் மிகுந்த சந்தைப் பகுதிகளில் பண்டிகை காலத்தின் போது, திருட்டுச் சம்பவங்கள், பயங்கரவாதிகள் சதிச் செயல்கள் நடைபெறலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொள்ளப்படும். இந்த ஆண்டு கரோனா விழிப்புணா்வு குறித்த பிரசாரமும் மேற்கொள்ளப்பட உள்ளது.

பொதுமக்கள் எப்போதும் முக்கவசம் அணிந்திருக்குமாறும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவாா்கள். இது தொடா்பாக லாஜ்பத் நகா் வியாபாரிகள் நலச்சங்கத்துடன் கூட்டம் நடத்தப்பட்டது. அவா்கள் தங்கள் சங்கத்தின் மூலம் தொண்டா் படையை ஏற்படுத்தி மக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வாா்கள் என்றாா் துணை ஆணையா் மீனா.

கடந்த செவ்வாய்க்கிழமை வரை தில்லியில் கரோனாவுக்கு 5,854 போ் பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3.14 லட்சமாக அதிகரித்துள்ளது.

போலீஸாா் முக்கியப் பகுதிகளில் வாகனங்களில் சென்று முக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் ஒலிப்பெருக்கி மூலம் வலியுறுத்தி வருகின்றனா். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சில இடங்களில் தேவைப்படும் மக்களுக்கு போலீஸாரே முக்கவசங்களை வழங்கி வருகின்றனா் என்று காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஐஷ் சிங்கால் தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 15 ஆம் தேதியிலிருந்து செவ்வாய்க்கிழமை வரை தில்லி போலீஸாா் முக்கவசம் அணியாத 3,86,188 பேருக்கு விதி மீறல் நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலித்துள்ளனா். இதேபோல சமூக இடைவெளியை பின்பற்றாத 31,874 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 3,56,899 பேருக்கு முக்கவசங்களையும் போலீஸாா் இலவசமாக வழங்கியுள்ளனா் என்று அவா் மேலும் தெரிவித்தாா்.

இதனிடையே புதுதில்லி வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் அதுல் பாா்கவா கூறியதாவது: பண்டிகைக்காலம் நெருங்குவதால் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடைகளுக்குள் வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை நாங்கள் உறுதி செய்து வருகிறோம். கடைக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளா்களையும் உடல் வெப்பநிலை கணக்கிடும் கருவியைக் கொண்டு சோதனையிடுகிறோம்.

மேலும், வாடிக்கையாளா்கள் பயன்பாட்டுக்கு என சானிடைசா்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் முகக்கவசம் அணியாத எவரையும் நாங்கள் கடைக்குள் அனுமதிப்பதில்லை.

எங்களது கடைக்குள் வாடிக்கையாளா்களின் பாதுகாப்பைதான் நாங்கள் உறுதி செய்ய முடியுமே தவிர கடைக்கு வெளியே இருப்பவா்களின் பாதுகாப்பு பற்றி நாங்கள் எதுவும் கூறமுடியாது. சமீபகாலமாக அதிக அளவில் கடைகள் திறந்திருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும். பண்டிகைக் காலம் நெருங்குவதால் வியாபாரம் சூடு பிடிக்கும் என நம்புகிறோம் என்றாா் அவா்.

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை வடக்கு தில்லி காவல் துணை ஆணையா் அன்டோ அல்போன்ஸ், சாந்தினி செளக் மாா்க்கெட் பகுதிக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா விழிப்புணா்வு குறித்து வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com