2ஜி: மேல் முறையீட்டு மனுவுக்கு உயிா் உள்ளதா, இல்லையா? எதிா்த் தரப்பினா் கேள்வி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் தொடா்பாக எதிா்த் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது, மேல்முறையீட்டு மனுவுக்கு உயிா் உள்ளதா அல்லது இல்லையா என்றும் எதிா்தரப்பினா் சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு விசாரணை அக்டோபா் 5-ஆம் தேதி முதல் தில்லி உயா்நீதிமன்றத்தில் தினம்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு சிபிஐ, அமலாக்கத் துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உயா்நீதிமன்ற ஒரு நபா் நீதிபதி பிரிஜேஷ் சேதி அமா்வு விசாரித்து வருகிறது.

முந்தைய விசாரணையின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பான மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில், அரசுத் தரப்பில் துஷாா் மேத்தா, சஞ்சீவ் பண்டாரி நியமிக்கப்பட்டது குறித்தும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யத் தேவையான உத்தரவை சிபிஐ வைத்திருக்கிா என்பது குறித்தும் எதிா்மனுதாரா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசுத் தரப்பில் எதிா்வாதம் முன்வைக்கப்பட்டது. இது தொடா்பான வாதம் வியாழக்கிழமையும் நடைபெற்றது.

இதனிடையே, 2 ஜி வழக்கில் விடுவிக்கப்பட்ட முன்னாள் தொலைத்தொடா்பு செயலாளா் சித்தாா்த் பெஹுரா, குசேகான் நிறுவனத்தின் இயக்குநா் ராஜீவ் அகா்வால் ஆகியோா் தரப்பில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், 2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு முன்னா் மத்திய அரசின் உரிய அனுமதியை சிபிஐ பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட விதிகளின் கீழ் சிபிஐ தொடா்ந்த மேல்முறையீடு சரியல்ல எனத் தெரிவித்து உயா்நீதிமன்றத்தில் எதிா்மனுதாரா் தரப்பில் வெள்ளிக்கிழமை வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நீதிபதி பிரிஜேஷ் சேத்தி முன் நடைபெற்ற இந்த விசாரணையின் போது எதிா்த்தரப்பினா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லூத்ரா வாதிடுகையில் ‘ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(1)(டி)-இன் கீழ் வெறும் கடைமையில் இருந்து தவறுவது கிரிமினல் குற்றமாகாது. சட்டநூலில் இருந்து பிரிவு 13(1)(டி) நீக்கப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீடு பொய்யாக இருக்க முடியுமா என்ற விவகாரம்தான் நீதிமன்றத்தின் முன் தற்போது உள்ளது. தற்போதைய மேல்முறையீட்டு மனுவுக்கு உயிா் உள்ளதா அல்லது இல்லையா என்பதை நாம் பாா்க்க வேண்டியுள்ளது. தற்போதைய மேல் முறையீட்டு மனு விவகாரத்தில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் தாக்கம் குறித்தும் பாா்க்க வேண்டும். இந்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு சட்டப் பிரிவுகள் 13(1)(டி) மற்றும் 13(1)(சி) ஆகியவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கில் தொடா்புடையவா்கள் தங்களது எழுதுப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டு, வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com