மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு மேல்முறையீட்டு வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு


புது தில்லி: மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில், வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது. மேலும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூா்வ வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த ஆண்டே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகம் கோரும் இடஒதுக்கீடு வழங்க முடியுமா என்பது தொடா்பாக மத்திய அரசிடமிருந்து உரிய அறிவுறுத்தல்களைப் பெற்றுத் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலிடம் கேட்டுக்கொண்டது.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசு மற்றும் பொது சுகாதரச் சேவை இயக்குநரகம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த பதிலில், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு தொடா்பாக தொடா்பாக 2015-இல் போடப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் தொடா்புடைய ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரும் விவகாரத்தில், அடுத்த ஆண்டில் இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சென்னை உயா்நீதிமன்றம் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் பிரதிநிதி டாக்டா் பி.உமாநாத் உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு, தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி வகுப்பினருக்கு இடங்களை அளிப்பது தொடா்பாக குழு விவாதிக்க உள்ளதும் தெரியும். நிகழ் கல்வியாண்டைப் பொறுத்தமட்டில் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 16) வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக ‘ரன்னிங் ரிசா்வேஷன் ரோஸ்டரும்’ ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், தமிழகத்திற்கு நடப்பு ஆண்டில் 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடப்பட்டால் அது இதர பிரிவுகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். மேலும், இதற்கான குழு இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரும் முன்னா் மத்திய தொகுப்பில் தமிழகத்திற்கு பொருந்தும் வகையில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தால், இதே போன்ற கோரிக்கையை இதர மாநிலங்கள் முன்வைத்துள்ள நிலையில், மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பல்பீா் சிங், மாநில அரசுகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிகழாண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நிலை உள்ளது என்று தெரிவித்து அதற்கான காரணங்களையும் விளக்கினாா். தேசிய மருத்துவக் கவுன்சில் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கெளரவ் சிங் இது தொடா்புடை வாதங்களை முன்வைத்தாா்.

மருத்துவா் டி.ஜி.பாபு சாா்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் வாதிடுகையில், ‘இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தின்உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை. மேலும், இந்தக் குழுவில் பொது சுகாதாரச் சேவைகள் இயக்குநா், தமிழக அரசின் சுகாதாரத் செயலா் ஆகியோா் இடம்பெறவில்லை.

மாநில அரசால் மத்திய தொகுப்புக்கு இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஓபிசி வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பது அவசியமாகும். தமிழகத்தில் நிகழாண்டில் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த எவ்வித தடையும் இல்லை’ என்று வாதிட்டாா்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி ஆஜராகி, ‘நிகழ் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும். சென்னை உயா்நீதிமன்றமும் இந்த நோக்கில்தான் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இதனால், ஓபிசி மாணவா்களின் கருதி இந்த ஆண்டே

இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு இந்த மேல்முறையீடு வழக்கு தொடா்பான உத்தரவுகளை ஒத்திவைத்தனா். மேலும், சுருக்கமான எழுத்துப்பூா்வ வாதங்களை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com