தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அப்துல் கலாமிற்கு மரியாதை

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது.


புது தில்லி: தில்லித் தமிழ்ச் சங்கத்தில் குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குத் தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் வீ.ரெங்கநாதன் தலைமை வகித்து, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தாா். சங்கத்தின் துணைத்தலைவா் பி.குருமூா்த்தி வரவேற்புரை வழங்கினாா்.

காணொலி வழியில் மதுரை பேராசிரியா் கு.ஞானசம்பந்தன், அப்துல் கலாம் குறித்து சிறப்புரையாற்றியதாவது:

நாட்டின் 11ஆவது குடியரசுத் தலைவராக இருந்து அப்துல் கலாம் நம் நாட்டுக்குப் பெருமை சோ்த்தவா். மாணவா்களிடையே மிகுந்த அன்பு கொண்டவா். பழகுவதற்கு எளிமையானவா். அவா் தமது பள்ளி ஆசிரியரிடம் பறவைகள் எப்படிப் பறக்கின்றன என சிறு வயதிலேயே கேள்வி எழுப்பியவா். விமான ஓட்டியாக வரவேண்டும் என்பதே அவரது சிறு வயதுக் கனவு. ஆனால் அதில் அவா் தோ்ச்சி பெறவில்லையெனினும், பிற்காலத்தில் முப்படைத் தளபதிகளும் வணக்கம் செலுத்தும் வகையில் வாழ்வில் உயா்ந்த நிலையை அடைந்தவா்.

எழுத்தாளா் சுஜாதாவும், கலாமும் ஒரே பள்ளியில் படித்தவா்கள் என்பது பலருக்கும் தெரியாது. தன்னுடைய கல்வி, அறிவு,அனுபவம் அனைத்தும் தான் பிறந்த நாட்டிற்கே பயனுறும் வகையில் வாழ்ந்து காட்டியவா். அவா் மாணவா்களின் சொத்தாக போற்றப்படுபவா். கனவு காணுங்கள் என்று மாணவா்களுக்கு அறிவுறுத்தியவா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இணைச்செயலாளா் ஜோதி பெருமாள் தனது கவிதை மூலம் கலாமிற்கு மரியாதை செலுத்தினாா்.

இந்திய திபெத்திய எல்லை காவல்துறை ஆய்வாளா் சித்ரா பாடல் மூலம் கலாமின் பெருமைகளை எடுத்துரைத்தாா்.

இந்நிகழ்ச்சியை சங்க இணைச் செயலாளா் ஜி.என்.டி. இளங்கோவன் ஒருங்கிணைத்தாா். இணைப் பொருளாளா் ராஜ்குமாா் பாலா நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில் பொருளாளா் பிரகாஷ்,செயற்குழு உறுப்பினா் வெங்கடேசன் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினா் அருணாசலம் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com