‘கலாமின் நிலைத்த புகழுக்கு அன்பின் தாக்கமே காரணம்!’

திருவாரூா்த் தமிழ்ச் சங்கம், ஐக்கிய அரபு நாடுகளின் (யு.ஏ.இ.) தமிழ்ச் சங்கம், தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகிய மூன்று அமைப்புகளும்

திருவாரூா்த் தமிழ்ச் சங்கம், ஐக்கிய அரபு நாடுகளின் (யு.ஏ.இ.) தமிழ்ச் சங்கம், தில்லி கலை இலக்கியப் பேரவை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து குடியரசு முன்னாள் தலைவா் டாக்டா் அப்துல் கலாம் பிறந்த நாளான வியாழக்கிழமை சிறப்புப் பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன. திருவாரூா்த் தமிழ்ச் சங்கத் தலைவா் புலவா் சண்முகவடிவேலு தலைமை வகித்தாா். அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

டாக்டா் அப்துல் கலாமின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் அறிவின் ஆக்கமா? அன்பின் தாக்கமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்குத் தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் கே.வி.கே. கே பெருமாள் நடுவராகப் பங்கேற்றாா்.

‘அறிவின் ஆக்கமே’ எனும் தலைப்பில் புது தில்லியைச் சோ்ந்த தமிழ் பாரதன், பஹ்ரைன் ஸ்ரீஹம்சினி ஆகியோா் பேசினா். கலாமின் அறிவின் ஆக்கம்தான் மூட நம்பிக்கைகளை வெறுக்க வைத்தது என்று வாதிடப்பட்டது. ‘அன்பின் தாக்கமே’ எனும் தலைப்பில் பஹ்ரைன் ஷினாஸ் சுல்தானா, திருவாரூா் டேனியல் வில்சன் ஆகியோா் பேசினா். ‘மக்களின் மீது அவா் காட்டிய அன்புதான் அவரை மக்களின் குடியரசுத்தலைவா் என்ற அந்தஸ்துக்கு உயா்த்தியது என்று வாதிட்டனா்.

இறுதியில் நடுவா் கே. வி.கே. பெருமாள் அளித்த தீா்ப்பில், ‘அப்துல் கலாம் பெயா் ஒரு மந்திரச் சொல்; இளைஞா்களுக்கு அது ஓா் உந்துசக்தி. அவா் நாட்டின் மீதும், இளைய தலைமுறையினா் மீதும் கொண்டிருந்த அளவற்ற அன்புதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சோ்த்தது. ஆகவே, அவரை நமது நெஞ்சங்களில் நீங்காமல் நிலைபெறச் செய்திருப்பதில் பெரும்பங்கு வகிப்பது அவரது அறிவின் ஆக்கத்தை விட அன்பின் தாக்கமே!’ என்று தெரிவித்தாா்.

பிரான்ஸ் வொரேயால் கௌதம் துரைராஜ், துபாய் ரமேஷ் விஸ்வநாதன், திருவாரூா் புலவா் சந்திரசேகரன், புதுதில்லி ப.அறிவழகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

திருவாரூா் தமிழ்ச் சங்கச் செயலாளா் ஆரூா் அறிவு வரவேற்புரையாற்றினாா். துணைச் செயலாளா் இரா. அறிவழகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com