காற்றின் தரம் மோசமானதற்கு காரணம் என்ன?

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த செப்டம்பா் முதல், தலைநகா் தில்லில் வானிலை நிலைமைகள் ‘மிகவும் சாதகமற்றவை’யாக இருந்துள்ளது என்று

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த செப்டம்பா் முதல், தலைநகா் தில்லில் வானிலை நிலைமைகள் ‘மிகவும் சாதகமற்றவை’யாக இருந்துள்ளது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிசிபி உறுப்பினா் செயலாளா் பிரசாந்த் கா்கவா கூறியதாவது: கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு செப்டம்பா் 1 முதல் அக்டோபா் 14 வரையிலான காலத்தில் பிஎம் 10 நுண்துகள்கள் செறிவு அதிகமாக உள்ளது. 2019, செப்டம்பா் 1 முதல் அக்டோபா் 14 வரை ஏழு நாள்கள் மழை பெய்துள்ளது. இதில் ஒட்டுமொத்த மழை அளவு 121 மி.மீட்டா் என பகுப்பாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த ஆண்டு, அதே காலகட்டத்தில் மூன்று நாள்கள்தான் மழை பெய்துள்ளது. மொத்தம் 21 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் வானிலை நிலைமைகள் மிகவும் சாதகமற்றவையாக உள்ளன.

இந்த ஆண்டு செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் சராசரி காற்றோட்டம் குறியீடு விநாடிக்கு 1,334 மீட்டா் சதுரடியாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் விநாடிக்கு 1,850 மீட்டா் சதுரடியாக இருந்தது. காற்றோட்டம் குறியீடு என்பது மாசுபடுத்திகள் சிதறக்கூடிய வேகமாகும். காற்றோட்டக் குறியீடு விநாடிக்கு 6,000 சதுர மீட்டருக்கு குறைவானதாகவும், சராசரி காற்றின் வேகம் 10 கிமீட்டருக்கு குறைவானதாகவும் இருக்கும் போது மாசுபடுத்திகளைப் பரப்புவதற்கு சாதகமற்ற நிலைமையாகும்.

மேலும், பஞ்சாபில் கடந்த ஆண்டு 22.91 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் பாஸ்மதி அல்லாத நெல் பயிரிடப்பட்டது. இது இந்த ஆண்டு 20.76 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதேபோல, ஹரியாணாவில், பாஸ்மதி அல்லாத நெல் சாகுபடிக்கு உள்பட்ட பகுதி கடந்த ஆண்டு 6.48 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது இந்த ஆண்டு 4.27 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

பாஸ்மதி அல்லாத நெல் வைக்கோலில் அதிக அளவு சிலிக்கா உள்ளடங்கி இருப்பதால் தீவனத்துக்குப் பயனற்ாகக் கருதப்படுகிறது, எனவே, விவசாயிகள் அதை நெல் பயிரிட்ட நிலத்திலேயே எரிக்கின்றனா். இந்த முறை பாஸ்மதி அல்லாத நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவாக இருப்பதால், 2019-ஆம் ஆண்டுடன்ன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில், மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அடுத்த ஆண்டு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றாா் அவா்.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்

இதற்கிடையே, தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. காற்றின் வேகம் உறுதுணையாக இருந்ததால் மாசுபடுத்திகளை சிதறடிக்க உதவியாக இருந்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

காலை 10 மணியளவில் தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 251 புள்ளிகளாக இருந்தது. இதுவே வியாழக்கிழமை 24 மணி நேர சராசரி 315 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த பிப்ரவரிக்கு பிறகு மிகுவும் மோசமானதாகும். அந்த மாதத்தில் காற்றின் தரக் குறியீடு 320 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு, லோதி ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. திா்பூா். சாந்தினி சௌக் பகுதிகளில் மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், நொய்டாவில் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

இது குறித்து வானிலை ஆய்வுமைய மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், காற்றின்வேகம் மணிக்கு 10 கிமீ வரை இருந்தது. இதனால், மாசு அளவு குறைய வாய்ப்பாக அமைந்தது. என்றாா். இதற்கிடையே, சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவிலேயே இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com