என்சிஆா் பகுதியில் சட்டவிரோத செங்கல் சூளைகள்: உ.பி. அரசு கண்காணிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்றின் தரத்தை பாதுகாக்கும் பொருட்டு, செங்கல் சூளைகளை சட்டவிரோதமாக நடத்துவதற்கு

தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்றின் தரத்தை பாதுகாக்கும் பொருட்டு, செங்கல் சூளைகளை சட்டவிரோதமாக நடத்துவதற்கு எதிரான கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு உத்தர பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா்- நீதிபதி ஏ. கே. கோயல் தலைமையில் நீதிபதி எஸ்.பி. வாங்டி இடம்பெற்ற அமா்வு கூறுகையில், ‘தில்லி, என்சிஆா் பகுதியில் குளிா்காலம் மற்றும் கோடைக்காலங்கள் முறையே மாசு நுண்துகள் பிஎம் 10 உமிழ்வுகளில் 5 முதல் 7 சதவீதம் வரை செங்கல் சூளைத் தொழிலின் பங்களிப்பு இருந்து வருகிறது. இதனால், என்சிஆா் பகுதியில் காற்றின் தரத்தை பாதுகாக்கும் வகையில் செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக நடத்துவதற்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்‘ என்று தெரிவித்தது.

செங்கல் சூளையை இயக்க அனுமதி கோரும் விண்ணப்பத்தையும் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

கரோனா காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட காலத்தின்போது செங்கல் சூளைகளுக்கு தடை விதித்த போதிலும் மாநிலத்தில் செங்கல் சூளைகளை இயக்க அனுமதித்ததற்காக உத்தர பிரதேச தலைமைச் செயலளரை தீா்ப்பாயம் முன்னா் குறைகூறி இருந்தது.

அதில், ‘செங்கல் சூளை இயக்குவதற்கு தடை விதித்து தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தீா்ப்பாயத்தின் உத்தரவை மீறி உத்தர பிரதேச தலைமைச் செயலளா் எவ்வாறு ஒரு முரண்பாடான உத்தரவை பிறப்பித்திருக்க முடியும் என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது கிரிமினல் குற்றத்திற்கு சமமாகும்’ என்று தெரிவித்திருந்தது.

மாா்ச் மாதத்தின்போது கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் காஜியாபாத் மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என்று தீா்ப்பாய அமா்விடம் காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். இதையடுத்து, தீா்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

பொது முடக்கக் காலத்தின்போது மாநிலத்தில் செங்கல் சூளைகளை செயல்பட அனுமதிக்குமாறு மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்ததாக அவா் தீா்ப்பாயத்தில் தெரிவித்தாா்.

என்சிஆா் மற்றும் பிற பிராந்தியங்களில் செங்கல் சூளைகளால் சுற்றுப்புறக் காற்றின் தரத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து திறன் ஆய்வை நடத்துமாறு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (சிபிசிபி) முன்னா் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

மாசு விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளால் காற்று மற்றும் நீா் மாசுபாடு ஏற்பட்டு வருவதாகவும், அத்தகைய செங்கல் சூளைகளுக்கு எதிராக எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பத்திரிகையாளா் ஷைலேஷ் சிங் மற்றும் பலா் தாக்கல் மனுக்கள் செய்திருந்தனா்.

அதில், பாக்பத் மாவட்டத்தில் 600 செங்கல் சூளைகள் முன் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன. மேலும், உத்தர பிரதேசத்தில் காஜியாபாத், கெளதம் புத் நகா், பாக்பத், மீரட், ஹபூா் மற்றும் முசாபா்நகா் உள்பட 7 மாவட்டங்களிலும், குா்கான் உள்பட ஹரியாணாவின் 13 மாவட்டங்கள் மற்றும் ராஜஸ்தானின் இரண்டு மாவட்டங்கள் (ஆல்வாா், பாரத்பூா்) ஆகியவற்றில் இதுபோன்று சட்டவிரோத செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன என அதில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com