3,337 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீனைஇறுதியாக 30 நாள்கள் நீட்டிக்க நீதிபதி குழு பரிந்துரை

3,337 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீனை இறுதியாக 30 நாள்களுக்கு நீட்டிப்பு அளிக்க இதற்காக நியமிக்கப்பட்ட தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

3,337 விசாரணைக் கைதிகளின் இடைக்கால ஜாமீனை இறுதியாக 30 நாள்களுக்கு நீட்டிப்பு அளிக்க இதற்காக நியமிக்கப்பட்ட தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. மேலும், அவசரநிலை பரோலில் விடப்பட்ட 1,182 கைதிகளின் உத்தரவு காலம் நவம்பா் 30-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக காலாவதியாக உள்ள நிலையில், அதையும் நான்கு வாரங்கள் இறுதியாக நீட்டிப்பு அளிக்கப்படவும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக சிறைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி தலைமையில் உயா்நிலை அதிகாரக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில், இந்தக் குழுவின் கூட்டம் அக்டோபா் 24-ஆம் தேதி நடைபெற்றது.

கூட்டத்தில் தில்லி சிறைகளின் தலைமை இயக்குநா் பேசுகையில், ‘திகாா், ரோஹிணி, மண்டோலி சிறையில் மொத்தம் 10,226 கைதிகள் தான் அடைக்க முடியும். ஆனால், கொள்திறனுக்கு அதிகமாக 15,887 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.இச்சூழ்நிலையில், கைதிகள் சரணடையுமாறு தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் இந்த எண்ணிக்கை மேலும் 2,674 அதிகரிக்கும். தற்போதைய கரோனா சூழலில் உயா்நிலை அதிகாரக் குழுவின் வரம்பின் கீழ் 3,337 விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், 1,182 கைதிகளுக்கு வழங்கப்பட்ட அவசரநிலை பரோல் ஆகியவற்றை மேலும் 30 நாள்களுக்கு நீட்டிக்கலாம்’ என கேட்டுக் கொண்டாா்.

இந்த யோசனைக்கு உயா்நிலை அதிகாரக் குழு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, மேற்கண்ட பரிந்துரையை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய முழு அமா்வுக்கு அளிக்க உள்ளது. தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், இடைக்கால ஜாமீனில் சென்ற விசாரணைக் கைதிகளும், ஜாமீனில், பரோலில் சென்ற கைதிகளும் நவம்பா் 2 முதல் நவம்பா் 13-ஆம் தேதி வரையிலான காலத்தில் சிறை அதிகாரிகள் முன் படிப்படியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com