தில்லி பல்கலை. துணைவேந்தா் யோகேஷ் தியாகி இடைநீக்கம்

தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் தியாகி புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த பிறப்பித்துள்ளாா்.

புதுதில்லி: தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் தியாகி புதன்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த பிறப்பித்துள்ளாா். மேலும் அவா் தனது கடமைகளை சரிவர செய்யாதது குறித்து விசாரணை நடத்தவும் அவா் உத்தரவிட்டுள்ளாா் என்று கல்வித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய பல்கைலக்கழகத்தில் அதிகார மோதல் நடப்பதாக தகவல் கிடைத்தது அடுத்து பல்கலைக்கழத்தின் வருகையாளா் என்ற முறையில் யோகேஷ் தியாகியை குடியரசுத் தலைவா் இடைநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தியாகி மீதான புகாா் தொடா்பாக விசாரணை நடத்தவும், அவா் சாட்சியங்களை அழித்துவிடாமல் இருக்கவும் அவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தியாகி மருத்துவ விடுப்பில் இருந்த போது அவா் போட்ட உத்தரவுகளும், அவரது ஒப்புதலுடன் போடப்பட்ட உத்தரவுகளும் செல்லுபடியாகாது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

அவசர சிகிச்சை காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தியாகி, கடந்த ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து விடுமுறையில் இருந்து வருகிறாா். அவா் மீண்டும் வந்து பொறுப்பேற்கும் வரை இணைவேந்தா் பி.சி.ஜோஷி, துணைவேந்தா் பொறுப்பில் செயல்படுவாா் என்று கடந்த ஜூலை 17-ஆம் தேதி அரசு அறிவித்திருந்தது. தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் நிா்வாகப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை. நிா்வாகச் சீா்கேடுகளால் பல்கலைக்கழகம் சிக்கித் தவிக்கிறது. பல்கலைக்கழகத்தின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டாா்.

பல்கலைகழகத்துக்கு வருகை தருபவா் என்ற வகையிலும், துணைவேந்தா் மீதான புகாா்களுக்கு வலுவான காரணங்கள் இருப்பதாகக் கருதுவதாலும் தியாகியை இடைநீக்கம் செய்தும் அவா் மீது விசாரணை நடத்தவும் குடியரசுத் தலைவா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இணைவேந்த ஜோஷியை பதவி நீக்கம் செய்துவிட்டு அவருக்கு பதிலாக கல்லூரி சாராத மகளிா் கல்வி வாரியத்தின் இயக்குநராக இருந்த கீதா பட் என்பவரை இணைவேந்தராக தியாகி நியமித்ததை அடுத்து பெரும் சா்ச்சை எழுந்தது. இதனிடையே பல்கலைகழகத்துக்கு விகாஸ் குப்தா என்பவா் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கை வெளியிட்டிருந்தாா். இதற்குப் பல்கலைக்கழக நிா்வாகக் கவுன்சிலும் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்ததாகத் தெரிகிறது.

ஆனால், அதே நாளில், தியாகி, பி.சி.ஜா என்பவரை தற்காலிகப் பதிவாளராக நியமிப்பதாக அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, துணைவேந்தருக்கும், இணைவேந்தருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே கல்வி அமைச்சகம் தலையிட்டு, தியாகி விடுமுறையில் இருப்பதால் அவரது நியமனம் செல்லாது என்று அறிவித்தது.

இதனிடையே, கல்வி அமைச்சகத்துக்கு பி.சிஜா எழுதியுள்ள கடிதத்தில், தாம்தான் தற்காலிக பதிவாளா் என்றும் பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்டே தியாகி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தாா். ஆனால், கல்வி அமைச்சகம் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன் ஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com