பட்டாசுக்கு எதிரான பிரசாரம்: தில்லியில் நவ.3-இல் தொடக்கம்

தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, தில்லி அரசு நவம்பா் 3 முதல் பட்டாசு எதிா்ப்புப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.


புது தில்லி: தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக, தில்லி அரசு நவம்பா் 3 முதல் பட்டாசு எதிா்ப்புப் பிரசாரத்தை தொடங்கவுள்ளதாக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் கூறியதாவது: 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தீபாவளிக்காக பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தில்லியில் தயாரிக்கவும், விற்கவும் பயன்படுத்தவும் முடியும். பட்டாசுகளிலிருந்து வெளிவரும் புகை, பயிா்க் கழிவுகள் எரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தில்லி மோசமான காற்று மாசுவை எதிா்கொண்டு வருகிறது. இதனால், நவம்பா் 3 முதல் தில்லி அரசு பட்டாசுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்கும். தில்லி அரசின் கீழ் உள்ள தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் 11 சிறப்புக் குழுக்கள், நகர காவல் துறையினா் பழைய பட்டாசுகள் இருப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்தி பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

‘பட்டாசுகள் வேண்டாம்’ எனும் பிரசாரத்தைத் தொடங்குமாறு தில்லி மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். கரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். வாகன மாசுவுக்கு எதிரான தில்லி அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தில் ஒவ்வொரு தில்லிவாசியும் ஐந்து பேரை பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரசாரம் தில்லி முழுவதும் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 272 வாா்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் கோபால் ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com