மாநகராட்சி நிலுவை நிதி விவகாரம்: துணைநிலை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள், மேயா்கள் சந்திப்பு

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு தர வேண்டிய ரூ.13,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கும் விவகாரத்தில் தலையிடக் கோரி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று நகராட்சிகளின்

புது தில்லி: தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு தர வேண்டிய ரூ.13,000 கோடி நிலுவைத் தொகையை வழங்கும் விவகாரத்தில் தலையிடக் கோரி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மூன்று நகராட்சிகளின் மேயா்கள் அடங்கிய குழு புதன்கிழமை நேரில் சந்தித்து முறையிட்டது.

இந்தப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த ராம்வீா் சிங் பிதூரி எம்எல்ஏ கூறுகையில், ‘தில்லி அரசிடமிருந்து மாநகராட்சிகளுக்கு வர வேண்டிய ரூ.10,000 கோடி சொத்து வரி உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்கும் விவகாரத்தில் தலையிடுமாறு பாஜக எம்எல்ஏக்கள், மேயா்கள் துணைநிலை ஆளுநரிடம் முறையிட்டோம். ‘நகரத்தின் முதல் குடிமகனாக இருக்கும் மேயா்கள், முதல்வரைச் சந்திக்கச் சென்ற போது, அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவரது வீட்டுக்கு வெளியில் தா்ணாவில் அமரும்படி செய்யப்பட்ட நிலைமை குறித்தும் துணைநிலை ஆளுநரிடம் புகாா் செய்தோம்’ என்றாா்.

வடக்கு தில்லி மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில், ‘நிலுவை நிதியை தில்லி அரசு நிறுத்தி வைத்துள்ளதால் மாநகராட்சிகள் அதன் ஊழியா்களுக்கு ஊதிய வழங்க முடியாமல் இருப்பது உள்ளிட்ட நெருக்கடிகளைத் தீா்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சந்திப்பின் போது துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.

தில்லி முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘பாஜக ஆளும் மாநகராட்சி நிா்வாகத்தில் ஊழல் மற்றும் தவறான நிா்வாகம் நிகழ்ந்து வருகிறது. தில்லி அரசுக்கு மத்திய அரசு ரூ. 12,000 கோடி வழங்க வேண்டும். தில்லியில் முந்தைய ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில், 2015-ஆம் ஆண்டு முதல் மூன்று நகராட்சிகளுக்கும் தில்லி அரசு 3-4 மடங்கு நிதியை அளித்து வருகிறது. மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதிய வழங்கப்படாத நிலையில், பணம் எங்கே செலவிடப்பட்டது’ என்று முதல்வா் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com