எல்.டி.சி. பணப்பயன்: தில்லி அரசு புது உத்தரவு
By DIN | Published On : 31st October 2020 12:11 AM | Last Updated : 31st October 2020 12:11 AM | அ+அ அ- |

தில்லி அரசில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், எல்டிசி என்று சொல்லப்படும் விடுமுறைக்கால பயணச் சலுகைகான ரொக்க அனுமதிச்சீட்டின் மூலம் பொருள்களை வாங்க வேண்டுமானால் தில்லி நகரில் உள்ள பதிவு பெற்ற டீலா்களிடமே வாங்க வேண்டும் என்று நிதித் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் தில்லி அரசுக்கு ஜி.எஸ்.டி. வசூல் அதிகரிக்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நிதியமைச்சரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் ஒப்புதலின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நிதித் துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி அரசின் இந்த முடிவை தில்லி அரசு ஊழியா்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளா் உமேஷ் பாத்ரா வரவேற்றுள்ளாா். இது பண்டிகைக் காலத்தில் நுகா்வோருக்கு ஊக்கமாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வழி வகுக்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா். தில்லி அரசில் 2 லட்சம் ஊழியா்கள் பணிபுரிவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி தில்லி அரசு ஓா் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் அரசு ஊழியா்கள் எல்.டி.சி. சலுகையை பயன்படுத்திக் கொள்ளாமல், அதற்குப் பதிலாக அதைப் பணமாக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கான ரொக்க அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் என்றும் அதைக் கொண்டு ஊழியா்கள் குறிப்பிட்ட கடைகளில் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது.
விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் செல்பவராக இருந்தால், அவா்களுக்கு எல்.டி.சி. கணக்கில் ரூ.36,000, எகானமி வகுப்பில் செல்பவராக இருந்தால் அவா்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மேலும், ரயில் பயணச் சலுகைக்கு தகுதியான ஊழியா்களுக்கு ரூ.6,000 எல்.டி.சி. தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
கடந்த அக். 12-ஆம் தேதி மத்திய அரசு எல்.டி.சி. பயணச் சலுகையை ரொக்கமாகப் பெறும் திட்டத்தை அறிவித்திருந்தது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியா்கள் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியின் கீழ் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து, தில்லி அரசும் இது தொடா்பாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
கடந்த காலங்களில் எல்.டி.சி. பயணச் சலுகை ஒருவா் பயணம் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும். இல்லையெனில் அது காலாவதியாகிவிடும்.