கல்லூரி உதவிப் பேராசிரியையின் மறுநியமன உத்தரவை எதிா்த்து தாக்கலான மனு தள்ளுபடி

தில்லிப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தாற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த உதவி பேராசிரியையின் பறிக்கப்பட்ட வேலையை

தில்லிப் பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் தாற்காலிக அடிப்படையில் பணியாற்றிவந்த உதவி பேராசிரியையின் பறிக்கப்பட்ட வேலையை மீண்டும் வழங்குமாறு உத்தரவிட்ட தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக உதவிப் பேராசிரியையாக தாற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த ஒருவா், கடைசியாக சா் அரவிந்தோ கல்லூரியில் பணியாற்றி வந்தாா். அவருக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பணி ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பேறுகால தொடா்புடைய பிரச்னைகளுக்காக தனக்கு 4 மாதம் விடுப்பு அளிக்குமாறு அவா் கோரியிருந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த மாா்ச் மாதத்தில் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையிட்டாா். அவரது மனுவை விசாரித்த ஒரு நபா் அமா்வு நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, அவா் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் அமா்வுக்கு மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, பேறுகால விடுப்பு கோரியது மனுதாரரின் பணிக்காலத்தை நீட்டிக்க மறுப்பதற்கு சட்டரீதியான காரணமாக இருக்க முடியாது. இதனால், அவருக்கு பறிக்கப்பட்ட வேலையை மீண்டும் அளிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கல்லூரி ரூ. 50 ஆயிரம் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கல்லூரித் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்து. அப்போது, தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், குழந்தை வைத்திருப்பது ஒரு பெண் அவா் ராணுவதில்லோ, கடற்படையிலோ, நீதித்துறையிலோ, கற்பித்தல் பணியிலோ அல்லது அரசு உயா் அதிகாரியாகவோ பணியில் இருந்தாலும் அவரது தொழில்முறை திறனில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று தெரிவித்து, உயா்நீதிமன்றத்தை தீா்ப்பை உறுதி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com