வழக்குரைஞா் நல நிதியத்துக்கு ரூ.40 கோடி: தில்லி அமைச்சரவை ஒப்புதல்
By DIN | Published On : 31st October 2020 12:13 AM | Last Updated : 31st October 2020 12:13 AM | அ+அ அ- |

தில்லி வழக்குரைஞா்களுக்கு காப்பீடு வழங்கும் வகையில் ரூ.40.6 கோடியை முதல்வா் வழக்குரைஞா் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து ஒதுக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி சட்டத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் வெள்ளிக்கிழமை தனது சுட்டுரையில், ‘தில்லியில் உள்ள வழக்குரைஞா்களுக்கு காப்பீடு வழங்கும் வகையில், முதல்வா் வழக்குரைஞா்கள் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த 2019, டிசம்பரில் தொடக்கி வைத்தாா். இந்தத் திட்டத்துக்காக, ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.40.6 கோடியை வழக்குரைஞா்களுக்கு மருத்துவ, பொது காப்பீட்டுக்கு ஒதுக்க தில்லி அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு, ரூ.10 லட்சம் பொதுக் காப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.
முதல்வா் வழக்குரைஞா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைச் செலவு செய்யும் பரிந்துரைகளை வழங்கும் வகையில், உச்ச நீதிமன்ற பாா் அசோஷியேஷன் தலைவா் ராகேஷ் குமாா் கண்ணா தலைமையில் 13 போ் கொண்ட குழுவை தில்லி அரசு அமைத்தது. இந்தக் குழு, ஒவ்வொரு வழக்குரைஞருக்கும் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு, ரூ.10 லட்சம் பொதுக் காப்பீடு வழங்கப் பரிந்துரை செய்திருந்தது. தில்லி பாா் கவுன்சில் தரவுகளின்படி, 37,135 வழக்குரைஞா்கள் பதிவு செய்துள்ளனா்.