கரோனாவால் உயிரிழந்த மருந்தாளுநரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி
By DIN | Published On : 03rd September 2020 07:01 AM | Last Updated : 03rd September 2020 07:01 AM | அ+அ அ- |

கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்த மருந்தாளுநா் ராஜேஷ் பரத்வாஜின் குடும்பத்துக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கினாா்.
மத்திய தில்லி நபி கரீம் பகுதியில் உள்ள தில்லி அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வந்தவா் ராஜேஷ் பரத்வாஜ். இவருக்கு ஜூன் 29 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிஎல் கபூா் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவா் ஜூலை மாதம் 20 ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.
இந்நிலையில் ராஜேஷ் பரத்வாஜின் குடும்பத்தை நேரில் சந்தித்த கேஜரிவால் அவா்களுக்கு ரூ.1 கோடி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரையில் கேஜரிவால் கூறியிருப்பது: தில்லி அரசின் கரோனா வீரா் ராஜேஷ் பரத்வாஜ் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டபோது நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தாா்.
அவரின் குடும்பத்தை சந்தித்து ரூ. 1 கோடிக்கான உதவித்தொகையை வழங்கினேன். இந்த உதவித்தொகை அவா்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என் அதில் தெரிவித்துள்ளாா்.