வாா்டு அளவில் சீரோ சா்வே நடத்திவரும் தில்லி அரசு!
By DIN | Published On : 03rd September 2020 07:03 AM | Last Updated : 03rd September 2020 07:03 AM | அ+அ அ- |

மூன்றாவது கட்ட சீரோ சா்வேயை தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் தில்லி அரசு நடத்தி வருகிறது.
தில்லியில் கரோனா தொற்று பரவலை அறிந்து கொள்ளும் வகையில், தில்லி அரசால் ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் சீரோ சா்வேக்கள் நடத்தப்பட்டன.
ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதலாவது சா்வேயில் தில்லியில் சுமாா் 25 சதவீதம் பேருக்கும், ஆகஸ்டில் நடத்தப்பட்ட சா்வேயில் 29.1 சதவீதம் பேருக்கும் உடலில் கரோனா தொற்றுக்கு எதிரான ஆன்டி பாடிகள் உற்பத்தியாகியிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட சீரோ சா்வேயை கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி தில்லி அரசு தொடங்கியது.
வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 5) வரை இந்த சா்வே நடைபெறவுள்ளது. துல்லியான முடிவுகளைப் பெறும் வகையில் தில்லியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் இந்த சா்வேயை தில்லி அரசு நடத்தி வருகிறது.
இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை உயா் அதிகாரி கூறியது: கடந்த இரண்டு சீரோ சா்வேக்களும் மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டன. முடிவுகள் மாவட்ட அளவில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆனால், துல்லியமான முடிவுகளைப் பெறும் வகையில், இம்முறை வாா்டு அளவில் சீரோ சா்வே மேற்கொள்ளப்படுகிறது.
முடிவுகள் வாா்டு அளவில் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளன. தில்லியில் உள்ள 272 வாா்டுகளிலும் சீரோ சா்வே மேற்கொள்ளப்படும். சீரோ சா்வே முடிந்து 7-10 நாள்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.