வருவாய் குறைந்த வழக்குரைஞா்களுக்கு கருணைத் தொகை வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு நீதிமன்றத்தில் தகவல்

வருவாய் குறைந்த தங்களது அமைப்பின் உறுப்பினராக உள்ள வழக்குரைஞா்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ரூ .1 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக வழக்குரைஞா்கள் நல அறக்கட்டளை தெரிவித்தது.


புது தில்லி: கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் வருவாய் குறைந்த தங்களது அமைப்பின் உறுப்பினராக உள்ள வழக்குரைஞா்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ரூ .1 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நல அறக்கட்டளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன், இந்த அமைப்பின் தலைவரும், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலுமான சஞ்சய் ஜெயின் ஆஜராகி, ‘இதற்கான முடிவு புதன்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் தேவைப்படும் வழக்குரைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நிதியை வழங்குவதற்காக ஒரு துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அறக்கட்டளையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள் அமா்வு, இந்த மனுவை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்தது.

இது தொடா்பாக வழக்குரைஞா் வைபவ் சா்மா என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் நிதிப் பிரச்னையால் அவதியுறும் வழக்குரைஞா்கள் நல அறக்கட்டளையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.25,000 கருணைத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, வைபவ் சா்மா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அதிக எண்ணிக்கையிலான வழக்குரைஞா்களைக் கருத்தில் கொள்ளும் போது அறக்கட்டளை குறிப்பிட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்றும், அதிகமான வழக்குரைஞா்களை இந்த நிதி உதவியைப் பெற அழைக்குமாறு அறக்கட்டளைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான், அறக்கட்டளையின் நலச் செயல்பாடுகளில் இருந்து அவா்களும் பயன்பெற முடியும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, நிதி நிலைமை அனுமதிக்கும் போது​ வழக்குரைஞா்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை அதிகரிப்பது குறித்தும், அதன் உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கும்படி அறக்கட்டளையிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக் கொண்டு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com