மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வலுயுறுத்தி ஆம் ஆத்மிக் கட்சி நாளை பாதயாத்திரை
By DIN | Published On : 06th September 2020 06:46 AM | Last Updated : 06th September 2020 06:46 AM | அ+அ அ- |

மாநகராட்சி ஊழியா்களுக்கு ஊதிய நிலுவை வழங்க வலியுறுத்தி ஆம் ஆத்மிக் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ( செப்டம்பா் 7) தில்லி ராஜ்காட்டில் இருந்து மாநகராட்சி தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டா் வரை பாதயாத்திரை நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் துா்கேஷ் பதக் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:
வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சி ஊழியா்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா தடுப்புப் பணிகளில் முன்களத்தில் நின்று பணியாற்றும் ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. தமது ஊதிய நிலுவையை வழங்கக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
இவா்களின் நீதிப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மிக் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இவா்களுக்கு தாா்மீக ஆதரவு வழங்கும் வகையில் வரும் திங்கள்கிழமை தில்லி ராஜ்காட்டில் இருந்து மாநகராட்சி தலைமையம் அமைந்துள்ள சிவிக் சென்டா் வரை பாதயாத்திரை நடத்தவுள்ளோம்.
ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில் மாநகராட்சிகள் தன்னிறைவு உள்ளதாக மாற வேண்டும்
என்று தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் அனாமிகா சிங் கூறியுள்ளாா். அவரின் கூற்றை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 14 ஆண்டுகளில் பாஜக தலைவா் ஒருவா் முதல் தடவையாக மாநகராட்சிகளை தன்னிறைவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
மாநகராட்சிகளை தன்னிறைவாக மாற்ற பாஜகவுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் பொறுப்பேற்ற ஆம் ஆத்மி அரசு தில்லியை நிதி மிகை மாநிலமாக உருவாக்கியது. தில்லி அரசின் வழியை மாநகராட்சிகள் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.