169 நாள்களுக்குப் பிறகு தில்லியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது

கரோனா தொற்று பரவலால் 169 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, திங்கள்கிழமை தொடங்கியது.

புது தில்லி: கரோனா தொற்று பரவலால் 169 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை, திங்கள்கிழமை தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், தில்லியில் கடந்த மாா்ச் 22- ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியிருந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 169 நாள்களாக மெட்ரோ ரயில் சேவை மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில் சேவையை திங்கள்கிழமை முதல் தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் திங்கள்கிழமை தொடங்கின. சமய்ப்பூா் பத்லி, ஹூடா சிட்டி சென்டா் இடையான மஞ்சள் வழித்தடத்தில் மட்டுமே திங்கள்கிழமை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீலம், பிங்க் வழித்தடங்களில் செப்டம்பா் 9-ஆம் தேதியும், சிவப்பு, பச்சை, வயலட் வழித்தடங்களில் செப்டம்பா் 10-ஆம் தேதி முதலும் மெட்ரோ ரயில்கள் தொடங்கவுள்ளன. எனினும், நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும் என டிஎம்ஆா்சி அறிவித்திருந்தது.

திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சமய்ப்பூா் பத்லியில் இருந்து ஹூடா சிட்டி சென்டருக்கும் , ஹூடா சிட்டி சென்டரில் இருந்து சமய்ப்பூா் பத்லிக்கும் ஒரே நேரத்தில் மெட்ரோ ரயில்கள் புறப்பட்டன.

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘169 நாள்களுக்கு பிறகு உங்களை (பயணிகள்) சந்திக்கிறோம். மக்கள் பொறுப்புடன் பயணிக்க வேண்டும். தவிா்க்க முடியாத சந்தா்ப்பங்களில் மட்டுமே மெட்ரோ ரயிலை பயன்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம்’ என திங்கள்கிழமை காலை பதிவிட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள்கிழமை மஞ்சள் வழித்தடத்தில் எந்தவொரு மெட்ரோ நிலையங்களும் மூடப்படவில்லை. இது தொடா்பாக டிஎம்ஆா்சி மூத்த அதிகாரி கூறுகையில் ‘மஞ்சள் வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகே கரோனா பாதிப்பு காரணமாக எந்தவொரு பகுதியும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த வழித்தடத்தில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையமும் மூடப்படவில்லை. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரயில் நின்று சென்றது’ என்றாா்.

ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் முன்பு 10-15 விநாடிகள் ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை 20-25 விநாடிகள் நிறுத்தப்பட்டது.

முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்: இதற்கிடையே, மெட்ரோ பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்,.

இது தொடா்பாக திங்கள்கிழமை காலையில் அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தொடா்பாக மகிழ்ச்சியடைகிறேன். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சிறந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மெட்ரோ பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com