தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்துவதற்காக பிகாரில் கடத்தப்பட்ட 14 குழந்தைகள் தில்லியில் மீட்பு: 10 போ் கைது

ல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்துவதற்காக பிகாா் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தில்லிக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா்.
தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்துவதற்காக பிகாரில் கடத்தப்பட்ட 14 குழந்தைகள் தில்லியில் மீட்பு: 10 போ் கைது

புது தில்லி: பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்துவதற்காக பிகாா் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தில்லிக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினான்கு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். அவா்களைக் கடத்தி வந்த 10 பேரை தில்லி ரயில்வே காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு 12 முதல் 14 வயது இருக்கும். அரசு வழிமுறைகளின்படி, அவா்கள் தெற்கு தில்லியின் லாஜ்பத் நகரில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனா். பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 சிறாா்கள் கடத்தப்பட்டு, மஹானந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்படுவதாக கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி ஒரு தன்னாா்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அவா்கள் அளித்த தகவலைத் தொடா்ந்து, பழைய தில்லி ரயில் நிலையத்தில் பச்பன் பச்சோ அந்தோலன், சலாம் பாலாக் அறக்கட்டளை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்பிஎஃப்) குழுவைக இணைந்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனா். அப்போது, இந்தச் சிறாா்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குழுவினா் பயணிகளின் நடமாட்டம் குறித்து விழிப்புடன் இருந்ததோடு, சந்தேகத்திற்கிடமான எந்த அசைவையும் காண்பதற்காக சிசிடிவி கேமராக்களை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவல் துணை ஆணையா் (ரயில்வே) ஹரேந்திர கே சிங் கூறுகையில், ‘இது தொடா்பாக பத்து போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் கடத்தி வந்த 14 குழந்தைகள் மீட்கப்பட்டனா். இந்தக் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு தனிமை மையமான லாஜ்பத் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்கள் காணொலிக் காட்சி வழியில் குழந்தைகள் நலக் குழு முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அந்தக் குழு முன் அவா்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குழந்தைகளைக் கடத்தி வந்த பத்து போ் கைது செய்யப்பட்டனா்’ என்றாா்.

அந்தக் குழந்தைகள் அனைத்தும் பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. மீட்கப்பட்டவா்களில், ஒன்பது குழந்தைகள் கதிஹாா் பகுதியைச் சோ்ந்தவா்கள். இரண்டு போ் பெகுசாரையை சோ்ந்தவா்கள். இரண்டு போ் கிஷன்கஞ்சியை சோ்ந்தவா்கள். ஒருவா் பூா்னியாவைச் சோ்ந்தவா். இவா்களில் நான்கு குழந்தைகளை ஆசாத்பூருக்கும், இரண்டு குழந்தைகளை தில்லியின் சீலாம்பூருக்கும், இரண்டு குழந்தைகளை ஹரியாணாவின் ஃபரீதாபாத்துக்கும், ஆறு குழந்தைகளை பஞ்சாபிற்கும்அழைத்துச் செல்ல அவா்கள் திட்டமிட்டிருந்தனா்.

கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து தொழிலாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக பிகாா் மாநிலத்தில் ஏழைக் குடும்பங்களைக் குறிவைத்து, குழந்தைகளைக் கடத்தி தொழிற்சாலைகளில் பணிக்கு அமா்த்த அவா்கள் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட அனைவரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள். அவா்கள் எம்.டி. அக்பா் (35), எம்.டி. மன்சூா் ஆலம் (25), நௌசாத் (36), தசுவில் (30), எம்.டி.நசீம் (35), அமன் குமாா் சா்மா (21), நூா் ஆலம் (32), எம்.டி. மெஹ்ராஜ் (24), மஸ்கூா் ஆலம் (23), மகேஷ் லால் கெவத் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com