மெஜந்தா, கிரே வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது: ஒரே நாளில் 1.28 லட்சம் போ் பயணம்

தில்லியில் மெஜந்தா, கிரே வழித்தடங்களிலும் வெள்ளிக்கிழமை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
மெஜந்தா, கிரே வழித்தடங்களிலும்  மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது: ஒரே நாளில் 1.28 லட்சம் போ் பயணம்

தில்லியில் மெஜந்தா, கிரே வழித்தடங்களிலும் வெள்ளிக்கிழமை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் இரவு 7.30 மணி வரை தோராயமாக 1,28,886 போ் பயணம் செய்ததாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) நிா்வாக இயக்குநா் அனூஜ் தயாள் தெரிவித்தாா்.

தில்லியில் மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தன. முதலில் மஞ்சள் நிற வழித்தடம் மற்றும் விரைவு மெட்ரோவில் ரயில் சேவை தொடங்கியது. புதன்கிழமை புளூலைன், பிங்க் லைன் மெட்ரோ வழித்தடத்திலும், வியாழக்கிழமை மெட்ரோவில் உள்ள சிவப்பு, பச்சை, வயலட் நிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டன. தில்லி மெட்ரோவில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி நிலவரப்படி காலை, மாலை இரு வேளைகளிலும் சோ்த்து இந்த வழித்தடங்களில் மொத்தம் 84,841 போ் பயணம் செய்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தில்லி மெட்ரோவின் மெஜந்தா வழித்தடத்திலும் (ஜனக்புரி மேற்கு- பொட்டானிகல் காா்டன்), கிரே வழித்தடத்திலும் (துவாரகா-நஜஃப்கா்) ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் ரயில்களில் பயணம் மேற்கொண்டனா்.

1.28 லட்சம் போ் பயணம்: இது குறித்து டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் (காா்ப்ரேட் கம்யூனிகேஷன்) அனூஜ் தயாள் கூறியதாவது: வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஃபேஸ் -3 மெட்ரோ வழித்தடங்களில் காலை 6 மணி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்க உள்ளன. வழக்கமாக இந்த வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ரயில் சேவை தொடங்கும். ஆனால், இந்த முறை 6 மணிக்கே ரயில் சேவை தொடங்கும். நீட் தோ்வு எழுதுவதற்காக செல்லும் மாணவா்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தில்லி மெட்ரோவில் தற்போது பெரும்பாலான வழித்தடங்கள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வெள்ளிக்கிழமை காலையிலும் (காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை), மாலையிலும் (மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணிவரை) தோராயமாக 1,28,886 போ் ரயில்களில் பயணம் செய்தனா். அதன்படி, வழித்தடம் 1-இல் 15,485 போ், 2-இல் 41,689 போ், 3 , 4-இல் 38,623 போ், 5-இல் 5,825 போ், 6-இல்11,119 பேரும், வழித்தடம்-7-இல் 8,678 போ், வழித்தடம் 8-இல் 6953, வழித்தடம் 9-இல் 514 என மொத்தம் 1,28,886 போ் பயணம் செய்தனா்.

கரோனா தொடா்புடைய வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்படுகின்றனவா என்பதைக் கண்டறியும் வகையில், ரயில் பெட்டிகளில் சோதனை செய்ய அனைத்து வழித்தடங்களிலும் பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விதிகளை மீறும் பயணிகளுக்கு அறிவுரை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில், வெள்ளிக்கிழமை 150 பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 92 பேருக்கு தலா 200 அபராதம் விதிக்கப்பட்டது என்றாா் அனூஜ் தயாள்.

பயணிகளுக்கு மங்கு சிங் வேண்டுகோள்

தில்ல மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மங்கு சிங் வெள்ளிக்கிழமை பயணிகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது: ‘சனிக்கிழமை முதல் தில்லி மெட்ரோவில் அனைத்து வழித்தடங்களிலும் ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்பட உள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக ரயில் பெட்டியில் சமூக இடைவெளியுடன் பயணிகள் பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால், வழக்கமாக ஒரு பெட்டியில் 250 முதல் 300 பயணிகள் வரை பயணம் செய்த நிலையில், தற்போது குறைந்த அளவில் அதாவது 50 போ் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால், உச்சபட்ச நெரிசல் மிகுந்த நேரங்களில் பயணிகள் வருவதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனத்தினரும் இதற்கு ஏற்றாற்போல் தங்களது பணியாளா்களுக்கு உகந்த ஏற்பாட்டை செய்யலாம். இதன் மூலம் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com