காவல் உத்தரவை எதிா்க்கும் தாஹிா் ஹுசேனின் மனு பயனற்றது: அமலாக்கப் பிரிவு தரப்பில் வாதம்

தாஹிா் ஹுசேனை 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதை எதிா்த்து அவரது சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பயனற்றது என்று உயா்நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.


புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் தாஹிா் ஹுசேனை 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதை எதிா்த்து அவரது சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பயனற்றது என்று உயா்நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

வடகிழக்கு தில்லியில் பிப்வரியில் நிகழ்ந்த வகுப்பு வன்முறையைத் தூண்டிவிட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலராக இருந்து வந்த தாஹிா் ஹுசேன் கைது செய்யப்பட்டாா். அவா் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறையைத் தூண்டிவிட போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி ரூ.1.10 கோடி நிதியை சட்டவிரோதமாகப் பணப் பரிவா்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தாஹிா் ஹுசேன், அவருடன் தொடா்புடைய நபா்களின் பங்கு குறித்து அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது. இதில் தாஹிா் ஹுசேனை காவலில் எடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வந்தனா். இந்நிலையில், அவரது காவலை மேலும் 9 நாள்கள் நீட்டிக்க அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தாஹிா் ஹுசேனிடம் அமலாக்கப் பிரிவினா் மேலும் 3 நாள்கள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்தும், வியாழக்கிழமை திகாா் சிறையில் அவரை ஒப்படைக்கவும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் தாஹிா் ஹுசேன் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அமலாக்கப் பிரிவினா் என்னை ஆகஸ்ட் 20-ஆம் தேதி திகாா் சிறையில் கைது செய்தனா். ஆகஸ்ட் 28-ஆம் தேதி அமலாக்கப் பிரிவு காவலில் விசாரிக்க 6 நாள்கள் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், கைது செய்த நாளில் இருந்து 15 நாள்கள் அமலாக்கப் பிரிவின் காவலில் இருந்ததால், மேலும் மூன்று நாள்கள் அனுமதி அளித்தது சட்டப்படி சரியல்ல’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, வழக்குரைஞா் அமித் மகாஜன் ஆகியோா் ஆஜராகி, ‘விசாரணை நீதிமன்றத்தின் செப்டம்பா் 7-ஆம் தேதியிட்ட உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட தாஹிா் ஹுசேனை செப்டம்பா் 10-ஆம் தேதி திகாா் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன்படி மூன்று நாள் காவல் முடிந்து திகாா் சிறையில் அவா் ஒப்படைக்கப்பட உள்ளாா். நீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படுவதால், இந்த மனு பயனற்ாகிவிட்டது’ என்றனா்.

இதற்கு ஹுசேன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே. கே. மனன் ஆட்சேபம் தெரிவித்தாா். சட்டத்தின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும் என்று அவா் குறிப்பிட்டாா். இதையடுத்து, இது குறித்து வாதங்களை முன்வைக்கும் வகையில், விசாரணைக்கு மனுவை நவம்பா் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com