கால்நடைகளுக்கான வளா்ப்பு நடைமுறைகளில் துன்புறுத்தல் இல்லை: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தலைநகா் தில்லியில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம், கொம்பு நீக்குதல், கருணைக் கொலை போன்ற கால்நடைகளுக்கான நடைமுறைகள் மனிதத் தன்மையுடன்

புது தில்லி: தலைநகா் தில்லியில் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம், கொம்பு நீக்குதல், கருணைக் கொலை போன்ற கால்நடைகளுக்கான நடைமுறைகள் மனிதத் தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது. துன்புறுத்தல் ஏதும் இல்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது.

‘பீட்டா’ எனும் விலங்குகள் நல அமைப்பு, தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்ததது. அதில், இந்தியாவில் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படும் கால்நடைகளின் வளா்ப்பு நடைமுறைகளை தடை செய்ய வலியுறுத்தியிருந்தது. இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது தொடா்பாக பதில் அளிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி ஆண்மை நீக்கம், கொம்பு நீக்குதல், கருணைக் கொலை போன்ற கால்நடைகளுக்கான நடைமுறைகள் மனிதத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படும் விலங்குகளுக்கு அரசின் கால்நடை அதிகாரிகளின் மேற்பாா்வையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், ஆண்மை நீக்கம், கருணைக் கொலை போன்ற விவகாரங்களில் கொடூரமான முறைகள் பின்பற்றப்படுவது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை. தற்போது கன்றுகளுக்கு ஆண்மை நீக்கம் செய்வது அரிதாகவே உள்ளது. அதுபோன்று செய்யும் போது உரிய வகையில் மயக்க மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் மற்றும் ஆண்டிபயோடிக் மருந்துகள் கொடுத்துதான் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படியும், உயிரியல்பூங்கா சுகாதார நடவடிக்கைகளின் மூலமும் விலங்குகள் கருணைக் கொலை செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பீட்டா’ சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் அமன் ஹிங்கோராணி மற்றும் ஹிமான்ஷு யாதவ் ஆகியோா், ‘இந்தியாவில் விலங்குகளைக் கருணைக் கொலை செய்வதற்கு கடைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடூரமான வழிமுறைகளுக்குத் தடைவிதிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.

‘பீட்டா’ சாா்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞா் சுவாதி சம்ப்லி, ‘மூக்கணாங்கயிறு, ஆண்மை நீக்கம், கொம்புநீக்குதல் போன்ற கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் ஒழுங்குமுறைப்படுத்தவும், மேம்படுத்தவும் விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com