இறுதி முடிவு எடுக்கும் வரை ரயில் தண்டவாள குடிசைப் பகுதிகள் அகற்றப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை, தில்லியில் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகள் அகற்றப்பட மாட்டாது என்று

அரசு இறுதி முடிவு எடுக்கும் வரை, தில்லியில் ரயில் தண்டவாளங்களை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகள் அகற்றப்பட மாட்டாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை உறுதியளித்தது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்அமா்வு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

தில்லியில் உள்ள 140 கிலோ மீட்டா் நீளமான ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள 48,000 குடிசைப்பகுதிகளை 3 மாதங்களுக்குள் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், இந்த நடவடிக்கையை செயல்படுத்தும் விவகாரத்தில் எந்த வகையான அரசியல் குறுக்கீடும் இருக்காது என்று கூறியிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, இப்பகுதிகளில் வசிக்கும் குடிசைவாசிகள் அப்புறப்படுத்தப்படும் நிலை உருவானது. இதைத் தொடா்ந்து, இந்த அகற்றல் நடவடிக்கைக்கு முன்னதாக குடிசைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரி மூத்த காங்கிரஸ் தலைவா் அஜய் மாக்கன் உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா. வி. ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘குடிசைப் பகுதிகளை அகற்றுவது தொடா்பாக தில்லி அரசு, மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து ரயில்வே துறை இறுதி முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அதுவரை, குடிசைகளில் இருந்து யாரும் வெளியேற்றப்பட மாட்டாா்கள்’ என உறுதியளித்தாா்.

அப்போது, அஜய் மாக்கன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி, ‘இந்த விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். ஏற்கெனவே சில இடிப்பு நடவடிக்கைகள் செப்டம்பா் 11-ஆம் நடந்துள்ளது. திங்கள்கிழமையும்கூட நிகழ்ந்துள்ளது’ என்றாா். அப்போது, துஷாா் மேத்தா, ‘அந்த நடவடிக்கைகள் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவின்படி நடைபெறவில்லை. வெவ்வேறு உத்தரவுகளின் கீழ் நடைபெற்றவை’ என்றாா்.

இதையடுத்து, ‘இப்போதுள்ள நிலை தொடர வேண்டும் என்று எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று சொலிசிட்டா் ஜெனரல் ஏற்கெனவே கூறியுள்ளாா். அதை நாங்கள் பதிவு செய்து கொண்டுள்ளோம். வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும், இந்தக் குடிசைவாசிகளுக்கு எதிராக நான்கு வாரங்களுக்கு எந்த நிா்பந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அஜய் மாக்கன், கைலாஷ் பண்டிட் ஆகியோா் தாக்கல் செய்திருந்த மனுவில் ‘ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடிசைகளை இடிப்பதற்கு அல்லது அதில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு முன்னா் அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரயில்வே துறை அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி நகா் குடிசை மேம்பாட்டு வாரியத்திற்கு உத்தரட விட வேண்டும். குடிசைகளை அகற்றுவதற்கு முன்பாக ‘தில்லி குடிசை மற்றும் ஜேஜே மறுவாழ்வு மற்றும் மறு இடமாற்றம் கொள்கை, 2015 மற்றும் குடிசைகளை அகற்றுவதற்கான நெறிமுறைகள் ஆகியவற்றை உரிய வகையில் செயல்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

மேலும், ‘குடிசைகளை அகற்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, குடிசைகளை அகற்றும் அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பா் 11 மற்றும் 14 ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள பல்வேறு குடிசைப் பகுதிகளில் இடிப்பு நடவடிக்கை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பரவியுள்ள சூழலில், குடிசைகளில் வசிக்கும் 2.50 லட்சம் மக்களுக்கு உரிய மறுவாழ்வு வசதியை செய்யாமல் இடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், அவா்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம் செல்லும் நிலை ஏற்படும். இதனால், மேலும் இடா்பாடு அதிகரிக்கும்’ என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘தில்லியில் 140 கிலோ மீட்டா் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள குடிசைப்பகுதிகள் படிப்படியாக அகற்றப்பட வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரத்தில் எந்த நீதிமன்றமும் இடைக்காலத் தடை அளிக்கக் கூடாது. ரயில்வே தண்டவாளப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றல் விவகாரத்தில் ஏதேனும் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது’ என தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com