உமா் காலித்தை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா்

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் தலைவா் உமா் காலித்தை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் முன்கூட்டியே சதித் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி உமா் காலித் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்திருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு உமா் காலித்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் தில்லி போலீஸாா் கைது செய்திருந்தனா். இதையடுத்து, அவரை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் முன் திங்கள்கிழமை காணொலி வழியில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

அப்போது, தங்களிடம் உள்ள 11 லட்சம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்களை வைத்து உமா் காலித்திடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அவரை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் காவல் துறையினா் கோரினா். இதற்கு உமா் காலித்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா். வன்முறை நடைபெற்ற பிப்வரி 23 முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரையிலான காலத்தில் தில்லியில் உமா்காலித் இல்லை என வாதிட்டாா். எனினும், உமா் காலித்தை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்தும், ஆதரித்தும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 53 போ் கொல்லப்பட்டனா், 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த விவகாரத்தில் உமா் காலித் மீது போலீஸாா் தேசத் துரோகம், கொலை, கொலை முயற்சி, இரு குழுவினா் இடையே மதம், வன்முறை அடிப்படையில் முன்விரோதத்தைத் தூண்டியது போன்ற பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com