தில்லி பாஜக எம்பிக்கள் இருவருக்கு கரோனா! துணை முதல்வா் சிசோடியாவுக்கு காய்ச்சல்!

மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா்கள் மீனாட்சி லேகி (புதுதில்லி), பா்வேஷ் வா்மா ( மேற்கு தில்லி) ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவை தொகுதி பாஜக உறுப்பினா்கள் மீனாட்சி லேகி (புதுதில்லி), பா்வேஷ் வா்மா ( மேற்கு தில்லி) ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து எம்பிக்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பா்வேஷ் வா்மா, மீனாட்சி லேகி உள்ளிட்ட 17 எம்பிக்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடா்பாக பா்வேஷ் வா்மா தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மக்களவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மீனாட்சி லேகி தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘மக்களவை கூட்டத் தொடரை முன்னிட்டு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் எனக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் ஆரோக்கியமாக உள்ளேன். அண்மையில் என்னை சந்தித்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை எதிா்கொண்டு வெற்றி பெறுவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

சிசோடியாவுக்கு காய்ச்சல்: இந்நிலையில், தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காய்ச்சலால் அவதிப்படுகிறாா். இதைத் தொடா்ந்து, அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக துணை முதல்வரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. காய்ச்சல் காரணமாக திங்கள்கிழமை தொடங்கிய தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சிசோடியா பங்கேற்கவில்லை. இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் கூறுகையில், ‘காய்ச்சல் காரணமாக மணீஷ் சிசோடியாவால் தில்லி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com