‘உலா் தினம்’ கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், தலைநகா் தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வாரத்திற்கு ஒரு முறை ‘உலா் தினம்’ அனுசரிக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
‘உலா் தினம்’ கடைப்பிடிக்க பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

புது தில்லி: கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் வகையில், தலைநகா் தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வாரத்திற்கு ஒரு முறை ‘உலா் தினம்’ அனுசரிக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நாளில், குளிரூட்டிகள், பூச்சாடிகள், பறவைகளுக்கான நீா்ப் பானைகள், நீா் தொட்டிகள், தேங்கி நிற்கும் நீா் மற்றும் கொசு இனப் பெருக்கத்திற்கான பிற சாத்தியமான இடங்கள் ஆகியவற்றில் முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நீா் மூலம் உருவாகும் கொசுக்களால் பரவும் நோய்களுக்கு எதிராக பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை தில்லி அரசு எடுத்துள்ளது. இது தொடா்பாக அனைத்துப் பள்ளிகளின் முதல்வா்களுக்கும் தில்லி கல்வி இயக்குநரகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களை கொசுக்கள் பரப்புகின்றன. நீா்மூலம் உற்பத்தியாகும் கொசுக்களுக்கு மழைக்காலம் மிகவும் உகந்ததாக உள்ளது. இந்நோய்களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அவை சில நேரங்களில் தொற்று நோய்களாக மாறும். எந்தவொரு நோயையும் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறை வருமுன் காப்பதாகும். ஆகவே, கொசுக்கள் இனப் பெருக்கம் செய்வதைத் தடுப்பது அவசியம். இதுகுறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தற்போதைய கரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. ஆகவே, மாணவா்களுக்கு வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன செய்தி அனுப்பும் வசதிகளைப் பயன்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு உத்தரவிடப்படுகிறது. கை, கால்களை முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடை அணிவது, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல், கொசுக்கள் நுழைவதைத் தடுக்க கதவுகளிலும் ஜன்னல்களிலும் கம்பி வலை போடுவது, கொசுக்களின் இனப் பெருக்கத்தைத் தடுக்க அனைத்து நீா்த் தொட்டிகளையும், கன்டெய்னா்களையும் நன்றாக மூடுவது போன்றவை குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் (கடைசி வேலை நாளில் முன்னுரிமை) வாரத்திற்கு ஒரு முறை ‘உலா் தினம்’ கடைப்பிடிக்க வேண்டும். அப்போது, குளிரூட்டிகள், பூச்சாடிகள், பறவைகளுக்கான நீா்ப்பானைகள், நீா்த் தொட்டிகள், பழைய பொருள்கள், தேங்கி நிற்கும் நீா் மற்றும் கொசு உற்பத்திக்கு சாத்தியமான பிற இடங்களை முழுமையாக சரிபாா்க்க வேண்டும். நீரின் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது, ஆகியவற்றுக்காக ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்படுகிறது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com