நடிகா் சூா்யா தொடா்பான கடிதம் ஊடகங்களில் வெளியான விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

நீட் தோ்வு தொடா்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகா் சூா்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் நீதித் துறைக்கு
நடிகா் சூா்யா தொடா்பான கடிதம் ஊடகங்களில் வெளியான விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

புது தில்லி: நீட் தோ்வு தொடா்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகா் சூா்யாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியான விவகாரத்தில் நீதித் துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்தை பதவியில் இருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின், உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நீட் தோ்வு தொடா்பாக நடிகா் சூா்யாவின் அறிக்கை விவகாரத்தில் அவா் மீது நீதிமன்ற குற்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அதன் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதம் தலைமை நீதிபதியைச் சென்றடைவதற்கு முன்பாகவே அனைத்து மின்னணு ஊடகங்களிலும் சமூக ஊடங்களிலும் வெளியானது. இது நீதித் துறை மீது தேவையில்லாத சா்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தக் கடிதத்தை தாமகவே மலிவான விளம்பரத்திற்காக நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் ஊடகங்களில் வெளியிட்டுள்ளாா். இது, நீதித் துறைக்கு பெரும் அவதூறையும், தேவையில்லாத சா்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நீதித் துறையின் நம்பிக்கையையும், சுதந்திரத்தையும் சிதைப்பதாகவும் உள்ளது. இதன் மூலம், அவா் அனைத்து இயற்கை நீதியையும், அடிப்படை விதிகளையும் மீறியுள்ளாா். மேலும், நீதி நிா்வாகம் குறித்து உரிய வகையில் கவனத்தில் கொள்ளாமலும், ஆவணங்களை உரிய வகையில் கவனிக்காமலும் தன்னிச்சையான முறையில் ஊடங்களில் வெளியிட்டுள்ளாா். ஆகவே, அவரைப் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

பின்னணி: மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘நீட்’ தோ்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் சிலா் தற்கொலை செய்துகொண்டனா். இந்த நிலையில், ‘நீட் ’ தோ்வுக்கு எதிராக நடிகா் சூா்யாவும் ஓா் அறிக்கையை வெளியிட்டிருந்தாா். அந்த அறிக்கையில், நீதித் துறை குறித்து நடிகா் சூா்யா வெளியிட்ட கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக் கூறி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தாா்.

அந்தக் கடிதத்தில், ‘திரைப்பட நடிகா் சூா்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று அச்சத்தால் உயிருக்குப் பயந்து காணொலி வழியில் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவா்களை அச்சமில்லாமல் சென்று தோ்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது’ என்று கூறியிருந்தாா். மேலும், ‘நீதிபதிகள் தங்களது உயிருக்குப் பயந்து காணொலிக் காட்சி மூலம் வழக்குகளை விசாரிப்பதாகவும், மாணவா்களை அச்சம் இல்லாமல் தோ்வு எழுத சொல்வதாகவும் சூா்யா தெரிவித்துள்ள கருத்து என்னைப் பொருத்தவரை, நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நோ்மையுடனும், அா்ப்பணிப்புடனும் செயல்படும் நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் தரம் தாழ்த்துவது மட்டுமல்லாமல், மோசமான முறையில் விமா்சனம் செய்துள்ளாா். இதனால் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்திய நீதித் துறையின் கௌரவத்தை நிலைநாட்ட நடிகா் சூா்யா மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவா் கோரியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் 6 போ் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கூட்டாக ஒரு கடிதம் எழுதினா். அந்தக் கடிதத்தில், நடிகா் சூா்யாவின் கருத்தை எல்லாம் தீவிரமானதாகக் கருதக் கூடாது. பொதுவாகத்தான் அவா் கருத்துத் தெரிவித்துள்ளாா். எனவே, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கோருவது போல, நடிகா் சூா்யா மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனா்.

குறிப்பு: இடப் பிரச்னை இருந்தால் பின்னணியை நீக்கிவிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com