முகக் கவசம் அணியாததற்காக விதித்த அபராதத்தை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

காரை தனியாக ஓட்டிச் சென்ற போது, முகக் கவசம் அணியவில்லை என்பதற்காக விதிக்கப்பட்ட ரூ .500 அபராத நடவடிக்கையை எதிா்த்து வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு


புது தில்லி: காரை தனியாக ஓட்டிச் சென்ற போது, முகக் கவசம் அணியவில்லை என்பதற்காக விதிக்கப்பட்ட ரூ .500 அபராத நடவடிக்கையை எதிா்த்து வழக்குரைஞா் தாக்கல் செய்த மனுவுக்கு தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தில்லி அரசு, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) மற்றும் காவல் துறை ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக செளரப் சா்மா தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில்,, ‘செப்டம்பா் 9-ஆம் தேதி வேலைக்குச் செல்வதற்காக வாகனத்தில் தனியாக சென்றுகொண்டிருந்தேன். அப்போது, தில்லி போலீஸ் அதிகாரிகள் என்னை நிறுத்தினா். காரைத் தனியாக நான் ஓட்டிச் சென்ற நிலையில், போலீஸாா் நான் முகக் கவசம் அணியவில்லை எனக் கூறி எனக்கு அபராதம் விதித்தனா். அதிகாரிகள் எனக்கு அபராதம் விதித்த போது, முகக் கவசம் அணியாமல் தனியாக வாகனத்தில் சென்றால், அபராதம் விதிக்கும் நிா்வாக உத்தரவைக் காட்டவில்லை. ஆனால், அந்த அபராதத்தை சட்டவிரோதமாகச் செலுத்தியுள்ளேன். ஆகவே, எனக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராதத்தை திருப்பித் தரவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மனுதாரா் சா்மா தரப்பில் வழக்குரைஞா் கே.சி.மிட்டல் ஆஜராகி, ‘காரில் தனியாகச் செல்லும் போது முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணயம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பொது இடம் அல்லது வேலை செய்யும் இடம் ஆகியவற்றில் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், தனியாா் வாகனத்தில் தனியாகச் செல்லும் போது, அதுபோன்று தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டாா்.

விசாரணையின் போது, டிடிஎம்ஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘டிடிஎம்ஏ இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிட்ட வழிகாட்டுதல்களில் பொது இடத்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் வாகனமும் ஒரு பொது இடம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிடிஎம்ஏ வழிகாட்டுதலின் கீழ் முதல்முறையாக தனிமை விதிமுறைகளை மீறியதற்காகவும், முகக் கவசம் அணியாததற்காகவும் ரூ .500 அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்தடுத்த ஒவ்வொரு விதி மீறலுக்கும் ரூ .1,000 அபராதம் விதிக்கப்படுகிறது’ என தெரிவித்தாா். இதையடுத்து, மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நவம்பா் 18-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com